

ஆந்திர முதல்வருடன் பேசி அம்மாநில சிறைகளில் உள்ள தமிழகத் தொழிலாளர்களை மீட்க 2 மூத்த அமைச்சர்களை அங்கு அனுப்ப வேண்டும் என தமிழக அரசுக்கு திமுக தலைவர் கருணாநிதி கோரிக்கை விடுத்துள்ளார்.
இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், ''திருவண்ணாமலை மாவட்டம் ஜவ்வாது மலைப் பகுதியில் இருந்து ஆந்திர மாநிலம் திருப்பதிக்கு செம்மரங்கள் வெட்டச் சென்றதாக பலர் கைது செய்யப்பட்டு அம்மாநில சிறைகளில் அடைக்கப்பட்டுள்ளனர். செம்மரங்களை கடத்தியதாக கடந்த ஏப்ரல் மாதம் 20 தமிழக் தொழிலாளர்களை ஆந்திர வனத் துறையினர் சுட்டுக் கொன்றனர்.
செம்மரக் கடத்தல் வழக்கில் காவல் துறை அதிகாரி ஒருவரே முக்கிய குற்றவாளியாக கைது செய்யப்பட்டார். ஆனால், இந்த வழக்கில் எந்த முன்னேற்றமும் இல்லை. 20 தமிழர்கள் சுட்டுக் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து நூற்றுக்கணக்கான தமிழர்கள் கைது செய்யப்பட்டு கொலை முயற்சி வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
இது தொடர்பாக ஆந்திர முதல்வருக்கு கடிதம் எழுதியதுடன் கடமை முடிந்து விட்டதாக தமிழக அரசு நினைத்துக் கொண்டிருக்கிறது. நெல்லூர் மாவட்டத்தில் 63 தமிழர்களும், கடப்பா மாவட்டத்தில் 43 தமிழர்களும் எவ்வித விசாரணையும் இன்றி பல மாதங்களாக சிறையில் வாடி வருகின்றனர். அவர்களை மீட்க எந்த முயற்சியையும் தமிழக அரசு எடுக்கவில்லை. இது குறித்து நமக்கு நாமே விடியல் மீட்புப் பயணம் மேற்கொண்ட திமுக பொருளாளர் ஸ்டாலினிடம் பொதுமக்கள் கண்ணீருடன் முறையிட்டுள்ளனர்.
இந்நிலையில் திருப்பதி சிறையில் அடைக்கப்பட்டிருந்த வேலூர் மாவட்டம் திருப்பத்தூரைச் சேர்ந்த லோகநாதன் 2 நாள்களுக்கு முன்பு மர்மமான முறையில் இறந்துள்ளார். கடந்த 18-ம் தேதி கடப்பா சிறையில் செங்கம் அருகே உள்ள நீப்பத்துறை இருளர் காலனியைச் சேர்ந்த ரத்தினம் மர்மமான முறையில் இறந்துள்ளார். இது குறித்த விசாரணை நடத்த வேண்டும் என அவர்களது உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர்.
கடிதம் எழுதியதோடு கடமை முடிந்து விட்டதாகக் கருதாமல் ஆந்திர முதல்வருடன் பேச்சு நடத்தி அம்மாநில சிறைகளில உள்ள தமிழகத் தொழிலாளர்களை மீட்க 2 மூத்த அமைச்சர்களை உடனடியாக அனுப்ப வேண்டும்'' என்று கருணாநிதி வலியுறுத்தியுள்ளார்.