

தேமுதிக தலைவர் விஜயகாந்தை மக்கள் கலை இலக்கியக் கழக பாடகர் கோவன் இன்று (சனிக்கிழமை) சந்தித்தார்.
இந்த சந்திப்பு குறித்து தேமுதிக வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், "மக்கள் கலை இலக்கியக் கழக பாடகர் கோவன் தேமுதிக தலைவர் விஜயகாந்தை மரியாதை நிமித்தமாக சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமைக் கழகத்தில் இன்று (28.11.2015) சந்தித்தார். அப்பொழுது அவர் பாடிய பாடல்கள் கொண்ட குறுந்தகடுகள் மற்றும் புத்தகங்களை வழங்கினார்.
இச்சந்திப்பின் போது தேமுதிக இளைஞர் அணி செயலாளர் எல்.கே.சுதீஷ், மக்கள் அதிகார மையத்தின் மாநில ஒருங்கிணைப்பாளர் வழக்கறிஞர் ராஜூ, மாவட்ட ஒருங்கிணைப்பாளர் வெற்றிவேல் செழியன் ஆகியோர் உடனிருந்தனர்" எனக் குறிப்பிட்டுள்ளது.
முன்னதாக கோவன் திமுக தலைவர் கருணாநிதி, திராவிட கழக தலைவர் கி.வீரமணி, காங்கிரஸ் தலைவர் இளங்கோவன், விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் ஆகியோரையும் நேரில் சந்தித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
மதுவின் தீமைகள் குறித்து மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தவும், பூரண மதுவிலக்கை வலியுறுத்தவும் அடுத்த மாதம் சென்னையில் மகஇக பொதுக்கூட்டம் நடைபெறவுள்ளது. இக்கூட்டத்தில் கலந்து கொள்ளவே அனைத்து தலைவர்களையும் சந்தித்து வருவதாக கோவன் ஏற்கெனவே தெரிவித்திருந்தார் என்பது கவனிக்கத்தக்கது.