மது பாட்டில்களை பதுக்கி வைப்பதை தடுக்க தமிழகம் முழுவதும் தீவிர சோதனை
மது பாட்டில்களை பதுக்கி வைப்பதைத் தடுக்க, தமிழகம் முழுவதும் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவினர் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர்.
தமிழகத்தில் ஏப்ரல் 6-ம் தேதிசட்டப்பேரவை தேர்தல் நடைபெறஉள்ளது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால், தேர்தல் நடத்தைவிதிமுறைகள் அமல்படுத்தப்பட்டுள்ளன. அதன்படி, டாஸ்மாக் கடைகளில் மொத்தமாக மதுபானங்களை விற்பனை செய்ய தடை செய்யப்பட்டுள்ளது.
ஒரு நபருக்கு அதிகபட்சமாக நான்கரை லிட்டர் மதுபானங்கள் வழங்கலாம் என விதிமுறைகள் இருந்தாலும், தற்போது ஒரு நபருக்கு 2 லிட்டர் மதுபானம் மட்டுமே வழங்கப்பட்டு வருகின்றன. இதே நடைமுறையை தொடர்ந்து பின்பற்ற மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு அதிகாரிகள் டாஸ்மாக் நிர்வாகத்தினருக்கு அறிவுறுத்தியுள்ளனர்.
அதிகாரிகள் உத்தரவு
வாக்குப்பதிவு நடைபெறும் நாளில் டாஸ்மாக் கடைகள் பூட்டப்படும். அன்றைய தினம் கள்ளச்சந்தையில் மதுபானங்களை விற்பனை செய்ய, இப்போதே பலர் மதுபானங்களை வாங்கி பதுக்கி வைப்பார்கள். இப்படி பதுக்கி வைப்பவர்களை கண்டுபிடித்து நடவடிக்கை எடுக்க மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.
அதை தொடர்ந்தே மதுபானங்கள் பதுக்கி வைப்பதை தடுக்க தீவிர நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
தமிழகம் முழுவதும் மதுவிலக்கு அமலாக்கப்பிரிவினர் தீவிர சோதனைகளில் ஈடுபட்டுள்ளனர். வாகன சோதனைகளும் செய்துவருகின்றனர்.
குற்றங்களை தடுக்கலாம்..
மதுபான பாட்டில்களை வாங்கி விற்பனை செய்யும் பழைய குற்றவாளிகளை கண்காணித்தும் வருகின்றனர்.
மதுபானங்களை பதுக்கி விற்பனை செய்பவர்கள் குறித்துஅந்தந்த பகுதி காவல் நிலையத்துக்கு பொதுமக்கள் தகவல் கொடுக்க வேண்டும். அவ்வாறு கொடுக்க ஆரம்பித்தால் பல குற்றங்களை தடுக்க முடியும் என்று அமலாக்கப்பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
