Last Updated : 07 Mar, 2021 03:15 AM

 

Published : 07 Mar 2021 03:15 AM
Last Updated : 07 Mar 2021 03:15 AM

30 ஆண்டுகளைக் கடந்த வாசிப்பு புரட்சி

பல முற்போக்கு சிந்தனையாளர்களை வளர்த்த தில் சிதம்பரம் பெரியார் படிப்பகத்திற்கு முக்கிய இடமுண்டு. 30 ஆண்டுகளை கடந்தும் இணைய வளர்ச்சியிலும், தனது பங்களிப்பைச் செவ்வனே செய்து வருகிறது.

கடந்த 1988-89ம் ஆண்டுகளில் சிதம்பரம் நகரத்தில் வெள்ளப் பிறந்தான் தெருவின் கடைசிப் பகுதியில் நகராட்சிக்கு சொந்தமான ஒரு சிறிய இடம் சுகதாரமற்ற நிலையில், பன்றிகள் உலாவும் இடமாக இருந்தது. மக்கள் முகக் சுளிப்புடன் அந்த இடத்தை கடந்து செல்வதுண்டு.

அந்த அசுத்தமான இடத்தை அப்போதைய திராவிடர் கழக தோழர்கள் சுந்தரமூர்த்தி, காபி கடை மூர்த்தி உள்ளிட்டோர் சீர்படுத்தி, சில முற்போக்குவாதிகளின் உதவிகளைப் பெற்று படிப்பகம் ஒன்றை உருவக்கினர். அதற்கு ‘பெரியார் படிப்பகம்’ என்று பெயரிட்டனர்.

ஒருங்கிணைந்த கடலூர் மாவட்ட திமுக செயலாளராக இருந்த எம்.ஆர். கிருஷ்ணமூர்த்தியிடம் (எம்ஆர்கே பன்னீர் செல்வத்தின் தந்தை) பெரியார் படிப்பகம் திறப்பதற்கு உறுதுணையாக இருந்துள்ளார்.

தொடர்ந்து திராவிடர் கழக தோழர்கள் அந்த இடத்தில் ஒரு சிறிய ஓலைக் குடிசையை அமைத்தனர்.

அதனை 30.04.1989 அன்று எம்.ஆர்.கிருஷ்ணமூர்த்தி திறந்து வைக்க, நாளிதழ்கள், வார இதழ்களை வாங்கி வைக்க, வாசகர்களின் வாசிப்பு ஆர்வமுடன் தொடங்கியது.

படிப்பகத்திற்கு நாள் தோறும் 100 பேர்களுக்கும் குறைவில்லாமல் வந்து, நாளிதழ்களை படித்து சென்று வர, இடையிடையே பெரியாரின் கருத்துகளை பேசியும், விளக்கியும் வந்துள்ளனர்.

அந்த காலகட்டத்தில் திமுகவைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் பொன்முடி, முன்னாள் துணைவேந்தர் சபாபதி மோகன், மதிமுகவில் இருக்கும் வந்தியதேவன் உள்ளிட்டவர்கள் இந்த படிப்பகம் உருவாக்கத்திற்கு மாணவப் பருவத்தில் உறுதுணையாக இருந்து உதவி செய்துள்ளனர்.

ஓலைக்குடிசையில் இருந்த படிப்பகம் மழை நேரத்தில் சிதிலமடைந்து ஒழுக, சிதம்பரம் பகுதி சமூக ஆர்வலர் பழநி உள்ளிட்டவர்கள் உதவி செய்ததன் பேரில் சிமெண்ட் சிலாபில் சுற்றுச் சுவர் அமைத்து அதன்மீது தகர சீட் அமைக்கப்பட்டது.

இப்படி வளர்ந்த இந்தப் படிப்பகத்திற்கு தமிழறிஞர் கி.ஆ.பெ விஸ்வநாதம், பழ நெடுமாறன், முன்னாள் அமைச்சர் காளிமுத்து, முன்னாள் அமைச்சர் வி.வி சாமிநாதன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முதுபெரும் தலைவர் சங்கரய்யா, தமிழ் தேசிய பொதுவுடமைக் கட்சியின் தலைவர் மணியரசன், நாவலர் நெடுஞ்செழியன், தற்போதைய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளராக உள்ள பாலகிருஷ்ணன் உள்ளிட்ட தலைவர்கள் வருகை தந்து, இந்த வாசிப்பு பணியை ஊக்குவித்துச் சென்றிருக்கின்றனர்.

தற்போதும் அனைத்து முன்னணி நாளிதழ்கள், வார இதழ்களுடன் எளிய இடத்தில் ஒரு நல்ல வாசிப்பு அனுபவத்தை தருகிறது இந்தப் படிப்பகம். காலை 7 மணிக்கு திறக்கப்படும் படிப்பகம் மாலை 5 மணிக்கு மூடப்படுகிறது. பெரியவர்கள் மட்டுமின்றி வளரும் தலைமுறையினரும் வந்துச் செல்கின்றனர்.

ஆனாலும், சிற்சில சங்கடங்களுடனே இந்தப் படிப்பகத்தை தொடர்ந்து நடத்தி வருவதாக கூறுகிறார் படிப்பகத்தின் செயலாளர் கோ.வி சுந்தரமூர்த்தி.

“30 ஆண்டுகளைக் கடந்து வெற்றிகரமாக செயல்படுத்தி வருகிறோம். பல மாதங்கள் மின் கட்டணமே கட்டமுடியாத சூழ்நிலையில் மின்விசிறியை கழற்றி வைத்துள்ளேன். அறிவிற்கு வழிகாட்டும் இந்த படிப்பகத்திற்கு இலவச மின் வசதி செய்து தரலாம்.

இது கட்டிடமாக மாறிட அரசியல் கட்சி தலைவர்கள் உதவ வேண்டும்” என்கிறார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x