

விவசாயத்தின் முதுகெலும்பு பெண்கள் தான் என்றால் மிகையல்ல. கிராமப்புற பெண்களின் வாழ்வாதாரம் விவசாயத்தை நம்பியே உள்ளதால் அனைத்து நிலப் பகுதிகளிலும், பெண்களே பெருமளவில் ஈடுபட்டு வருகின்றனர்.
இருப்பினும் நம் சமூகமோ, நாடோ இப்பெண்களின் பங்களிப்பை கண்டும் காணாமலும் இருக்கிறது. அவர்களை விவசாயிகள் என அங்கீரிக்க மறுக்கிறது.
இத்தொழிலில் ஈடுபடும் ஆண்கள் மட்டுமே முன்னிலைப் படுத்தப்படுகின்றனர் என்று தனது ஆதங்கத்தை தெரிவிக்கிறார் பெண் விவசாயி ரங்கநாயகி.
“அரசு சார்பில் நடத்தப்படும் விவசாயி களுக்கான குறைதீர் கூட்டத்தில் கூட ஆண்கள் மட்டுமே பங்கேற்கின்றனர்” என்று தனது வருத்தம் தொனிக்கப் பேசுகிறார்.
கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் வட்டம் வடம்பூரைச் சேர்ந்த ரங்கநாயகி, தனது கணவரை இழந்த நிலையில், அவர் ஏற்று நடத்திய விவசாயப் பணியை தனது தோளில் சுமக்க நேரிட, இன்று அதையே தனது சுகமான சுமையாக மாற்றியிருக்கிறார்.
ராதா வாய்க்கால் பாசன சங்கத் தலைவர், வீர நாராயணன் உழவர் உற்பத்தியாளர் நிறுவனத்தின் இயக்குநர், வடம்பூர் உழவர் மன்றத் தலைவர், கடலூர் மாவட்ட உழவர் மன்ற செயற்குழு உறுப்பினர் என்ற பன்முகம் கொண்டவராகவும் விளங்குகிறார்.
மகளிர் தினத்தை ஒட்டி அவரிடம் பேசினோம். அவர் பகிர்ந்து கொண்டதில் சில...
“எனது பாட்டி, தந்தை போன்றோர் மண் மீது வைத்திருந்த மட்டற்ற பாசமும் விவசாயத்தின் மீதான பிடிப்புமே ஒரு இக்கட்டான தருணத்தில் என்னை வேளாண் பணிக்கு அழைத்து வந்தது.
பெண் விவசாயிகளின் உரிமைகளைப் பற்றி பேசும்போது, நம் புரிதலை பெண்ணியம் மற்றும் விவசாயப் பொருளாதாரத்தில் பொருத்திப் பார்ப்பது அவசியம். இந்திய விவசாய அரங்கில் பெண்ணியத்திற்கு ஆதரவாகவும், எதிராகவும், ஆண்களிடையே இரு நிலைப்பாடு உள்ளது.
பெண்கள் விவசாயம் செய்யும் போது அவர்களுக்கு ஆண் விவசாயிகளின் உதவி கிடைப்பதில்லை. எல்லா வேலைகளையுமே பெண்களே கவனித்துக் கொள்ளும் நிலை தான் உள்ளது.
உலகளாவிய விவசாயக் கொள்கைகள் கூட பெண் விவசாயிகளின் பிரச்சினைகளை தீர்ப்பதாக இல்லை. இந்தச் சூழலில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பெண்கள் விவசாயத்தில் சாதனை படைத்து வருவது வரவேற்க வேண்டிய விஷயம். வெறுமனே கூலித் தொழிலாளர்கள் என்பது தாண்டி பெரு விவசாயிகளாக பெண்கள் அதிகளவில் உருவாக வேண்டும்.
பண்டைய தமிழகத்தில், வேளாண் பணியில், அடுத்த பருவங்களுக்கான தரமான விதைகளை எடுத்து வைப்பதை இச்சமூகம் பெண்களிடத்தே தந்தது. அவர்கள் மட்டுமே அதைச் செய்ய வேண்டும் என்று விதியும் வகுக்கப்பட்டிருந்தது. ஏனெனில், அடுத்த தலைமுறைக்கான தரமான தேர்வு எது என்பதை அறியும் திறன் படைத்தவர்கள் பெண்கள் என்பதை அவர்கள் அறிந்து வைத்திருந்தனர். காலப் போக்கில், பலதரப்பட்ட விஷயங்களில் ஆணாதிக்க சிக்கல் தலை தூக்கியதுப் போல, வேளாண் பணியிலும் தலை தூக்கியிருக்கிறது. அதே நேரத்தில், இன்றைக்கும் விவசாயக் கூலிகளாகவே பெண்களின் நகர்வு இருக்கும்படியாக மாறியிருக்கிறது. இது மொத்தச் சமூகத்தையும் வீழ்த்தி விடும்.
பெண்களை விலக்கி விவசாயப் புரட்சி என்பது ஒரு தெளிவற்ற வளர்ச்சியைத் தரும். அது வளர்ச்சி போல இருக்கும். ஆனால், வளர்ச்சியடையாது” என்கிறார்.
“அறுவடைக்குப் பின் சேமிப்பு, வேளாண் பொருட்களை மதிப்புக் கூட்டுதல், சந்தைப்படுத்துதல் போன்ற பணிகளில் பெண்கள் இறங்கத் தொடங்கியிருக்கின்றனர். அவர்கள்நம்பிக்கை தரும் விதத்தில் அரசு சில சிறப்புத் திட்டங்களை முன் வைத்தால் நன்றாக இருக்கும்" என்றும் தனது விருப்பத்தை தெரிவிக்கிறார் ரங்கநாயகி.