Last Updated : 07 Mar, 2021 03:15 AM

 

Published : 07 Mar 2021 03:15 AM
Last Updated : 07 Mar 2021 03:15 AM

தனியார் நிறுவனத்தின் முயற்சியால் புதுப்பொலிவு பெற்ற சிறுகாட்டூர் தொடக்கப் பள்ளி

தமிழக கிராமங்களில் உள்ள ஊராட்சி ஒன்றியப் பள்ளிகள் பெரும்பாலும் உள் கட்டமைப்பு வசதிகள் இல்லாமல் இருக்கும். அப்படி இருந்த பள்ளிகளுள் ஒன்று, காட்டுமன்னார்கோவில் அருகே உள்ள சிறுகாட்டூர் கிராமத்தில் இயங்கி வரும் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி.

1955-ம் ஆண்டு தொடங்கப்பட்ட இப்பள்ளியில் படித்த பலரும் தற்போது அரசு, தனியார் நிறுவனங்களில் உயர் பதவிகளில் உள்ளனர். இப்பள்ளிக் கட்டிடம் வலுவிழந்து, மழையில் ஒழுகியபடி, ஒரு பாழடைந்த கட்டிடமாக கடந்த சில ஆண்டுகளாக காட்சியளித்தது.

பள்ளிக் கட்டிடத்தின் நிலை குறித்து தலைமையாசிரியர் காந்திமதி பலருக்கு கூறி, உரிய உதவிகளைச் செய்து தருமாறு கேட்டுள்ளார். அப்போது சிலர், ‘எல் அன்ட் டி நிறுவனத்திற்கு வேண்டுகோள் கடிதம் எழுதுங்கள்’ என்று கூற, அவரும் முயற்சிக்க, அந்த நிறுவனமும் அவரது கோரிக்கையை ஏற்றது. சில நாட்களில் நிறுவன அதிகாரி அன்பழகன் உத்தரவின் படி, அந்த நிறுவன பொறியாளர்கள் மற்றும் ஊழியர்கள் கொண்ட குழுவினர் பள்ளிக்கு வந்து பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

தொடர்ந்து கரோனா விடுமுறை காலத்திலேயே அக்டோபர் மாதம் பள்ளியை மேம்படுத்தும் பணிகள் தொடங்கப்பட்டது. படிப்படியாக பள்ளியின் கட்டிடம் புதுப்பித்தல், புதிய கழிவறை கட்டுதல், தளம் அமைத்தல், இறை வணக்க மேடைஅமைத்தல், பள்ளிக் கட்டிடத்திற்கு கிரில் அமைத்தல், வகுப்பறை மற்றும் பள்ளி வளாகத்திற்கு டைல்ஸ் அமைத்தல் உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடந்தன.

மேலும், மாணவர்களின் தண்ணீர் தேவையை பூர்த்தி செய்ய 180 அடியில் புதிய போர்வெல் அமைத்து, குழாய்கள் அமைக்கப்பட்டன. மேலும் தனியார் பள்ளிகளுக்கு இணையாக ‘ஸ்மார்ட் கிளாஸ்’ ஒன்றும் அமைக்கப்பட்டுள்ளது.

தற்போது கிராம மக்கள் வியக்கும் அளவிற்கு மாறியிருக்கிறது சிறுகாட்டூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி.

பணிகள் முடிந்து கடந்த 12 -ம் தேதி பள்ளியின் தொடக்க விழா நடந்தது. எல் அண்ட் டி நிறுவன உயர் அதிகாரி காணொலி காட்சி மூலம் பள்ளி கட்டிடத்தை திறந்து வைத்தார்.

புதுப் பொலிவுடன் இருக்கும் இந்தப் பள்ளிக் கட்டிடத்தை சுற்று வட்டார கிராம மக்கள் பார்த்து செல்கின்றனர்.

“பள்ளிக் கட்டிடத்தை மட்டும் சீரமைத்து தருமாறு கூறினோம். தற்போது எங்கள் பள்ளி டிஜிட்டல் பள்ளியாகவும் மாறியுள்ளது. எல்ட் அன்ட் டி நிறுவனத்திற்கு நன்றி. இதன் மூலம் மாணவர் சேர்க்கை அதிகமாகும்” என்கிறார் தலைமையாசிரியை காந்திமதி.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x