

அதிமுக கூட்டணியில் 23 இடங்கள் பெற்ற பாமக தலைமை, தாங்கள் போட்டியிட விரும்பும் தொகுதி பட்டியலில் முழுக்க முழுக்க வடமாவட்டங்களில் உள்ள தொகுதிகளையே குறிப்பிட்டுள்ளது.
இந்நிலையில், தன்னால் பாமக பலனடையும் அதே நேரத்தில் பாமகவின் மூலம் தனக்கும் பலன் கிடைக்க வேண்டும் என்ற நோக்கத்தில் வடமாவட்டங்களில் கூடுதல் தொகுதிகளில் போட்டியிட அதிமுக தலைமை விரும்புகிறது. அதற்கு பதிலாக பாமகவுக்கு சில தொகுதிகளை தென் மாவட்டங்களில் ஒதுக்க அதிமுக திட்டமிட்டுள்ளது.
இதேபோன்றுதான் கடந்த மக்களவைத் தேர்தலின்போது யாருமே எதிர்பார்க்காத வகையில் பாமகவுக்கு செல்வாக்கு இல்லாத தென்மாவட்ட தொகுதியான திண்டுக்கல்லை அதிமுக ஒதுக்கியது.
அதனால் அதிருப்தி அடைந்த அதிமுகவினர், எம்ஜிஆர் கட்சி தொடங்கிய பின் முதல் வெற்றியைத் தந்த திண்டுக்கல்லை பாமகவுக்கு ஒதுக்குவதா எனக் கேட்டு எதிர்ப்புத் தெரிவித்தனர்.
எனினும், அப்போது மாவட்டத்தில் அதிமுகவினரிடையே நிலவிய கோஷ்டி பூசலால் இந்த முடிவு எடுக்கப்பட்டதாகக் கூறி மேலிடத் தலைவர்கள் சமாதானப்படுத்தினர்.
வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் திண்டுக்கல் மாவட்டத்தில் ஆத்தூர் தொகுதியும், விருதுநகர் மாவட்டத்தில் சிவகாசி தொகுதியும் பாமகவுக்கு ஒதுக்க வாய்ப்புள்ளதாக அதிமுக தரப்பினர் தெரிவிக்கின்றனர்.
இதுகுறித்து அதிமுக நிர்வாகிகள் சிலர் கூறியதாவது:
கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக மாநில துணைப் பொதுச் செயலாளர் ஐ.பெரியசாமியை எதிர்த்துப் போட்டியிட்டு முன்னாள் அமைச்சர் நத்தம் ஆர்.விசுவநாதன் தோல்வியடைந்தார்.
ஆத்தூர் தொகுதி
இந்த முறை தனது சொந்த தொகுதியான நத்தத்தில் போட்டியிட விசுவநாதன் விருப்பமனு தாக்கல் செய் துள்ளார். அந்த தொகுதியை அவருக்கு ஒதுக்க அதிக வாய்ப்புள்ளது.
அதனால் அதிமுகவுக்கு கடும் போட்டியை அளிக்கக்கூடிய ஆத்தூரை பாமகவுக்கு ஒதுக்குவதற்கே வாய்ப்பு அதிகம்.
அதேபோல் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி, இந்த முறை தனது தொகுதியான சிவகாசியில் போட்டியிட விரும்பவில்லை. அதற்கு பதிலாக விருதுநகரில் போட்டியிட அவர் முயற்சித்து வருகிறார். இதனால், சிவகாசி தொகுதியையும் பாமகவுக்கு ஒதுக்க அதிக வாய்ப்புள்ளது என்று கூறினர்.