Published : 07 Mar 2021 03:16 AM
Last Updated : 07 Mar 2021 03:16 AM

திண்டுக்கல் மாவட்ட சட்டப்பேரவை தொகுதிகள்- அதிமுக, திமுகவில் ‘சிட்டிங்’ எம்.எல்.ஏ.,க்களுக்கு மீண்டும் ‘சீட்’

திண்டுக்கல்

அதிமுக, திமுக சார்பில் எம்.எல்.ஏ,வாக உள்ளவர்களுக்கு அந்தந்த கட்சிகள் சார்பில் மீண்டும் போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட உள்ளது.

திண்டுக்கல் மாவட்டத்தில் மொத்தம் உள்ள ஏழு தொகுதிகளில் கடந்த தேர்தலில் அதிமுகவை சேர்ந்தவர்கள் திண்டுக்கல், வேடசந்தூர், நிலக்கோட்டை ஆகிய மூன்று தொகுதிகளிலும், திமுகவை சேர்ந்தவர்கள் ஆத்தூர், ஒட்டன்சத்திரம், நத்தம், பழநி ஆகிய நான்கு தொகுதிகளிலும் எம்.எல்.ஏ.க்களாக தேர்ந்தெடுக்கப்பட்டனர். இவர்களுக்கு அந்தந்த கட்சிகள் சார்பில் மீண்டும் போட்டியிட வாய்ப்புகள் வழங்கப்பட வுள்ளன. இதனால் தேர்தல் தேதி அறிவிப்புக்கு முன்னரே இவ்வேட்பாளர்கள் தங்கள் ஆரம்பகட்ட பிரச்சாரத்தை தொடங்கிவிட்டனர்.

அதிமுக

திண்டுக்கல் தொகுதியில் திண்டுக்கல் சி.சீனிவாசன், வேடசந்தூர் தொகுதியில் பரமசிவம், நிலக்கோட்டை தொகுதியில் தேன்மொழி ஆகியோர் எம்.எல்.ஏ.,க்களாக தேர்வு செய்யப்பட்டனர். தற்போது திண்டுக்கல் தொகுதியில் வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சி.சீனிவாசன் மீண்டும் போட்டியிடுவது உறுதியாகிவிட்டது.

இவர், கட்சித் தலைமையிடம் மீண்டும் போட்டியிட விருப்பம் தெரிவித்து விருப்பமனு கொடுத்துள்ளார். கட்சித்தலைமை இவருக்கு மீண்டும் போட்டியிட வாய்ப்பு வழங்க உள்ளது.

வேடசந்தூர் தொகுதியில் தற்போதைய எம்.எல்.ஏ., பரமசிவம், முன்னாள் எம்.எல்.ஏ., பழனிச்சாமி ஆகியோரிடையே சீட் பெறுவதில் போட்டி நிலவுகிறது. பரமசிவம் எம்.எல்.ஏ., முதல்வர் அணியில் தொடர்ந்து இருந்ததால் அவருக்கு மீண்டும் போட்டியிட வாய்ப்பு கிடைக்கும் நிலை உள்ளது.

நிலக்கோட்டை தொகுதியில் இரண்டு முறை எம்.எல்.ஏ.வாக தேர்ந்தெடுக்கப் பட்டவர் தேன்மொழி, தற்போது எம்.எல்.ஏ.,வாக உள்ளார். இவருக்கே மீண்டும் போட்டியிட வாய்ப்பு வழங்கப் பட்டுள்ளது. அதிமுகவின் முதல் வேட்பாளர் பட்டியலிலேயே இவருக்கு வாய்ப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

கடந்தமுறை ஆத்தூர் தொகுதியில் போட்டியிட்டு தோல்வியடைந்த முன்னாள் அமைச்சர் நத்தம் ஆர்.விசுவநாதன் இந்தமுறை மீண்டும் நத்தம் தொகுதியில் போட்டியிட வாய்ப்பு உள்ளது.

ஒட்டன்சத்திரம் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட ஒவ்வொரு தேர்தலிலும் புதியவர்களுக்கே சீட் வழங்கப்படுகிறது. இந்தமுறை ஒன்றிய செயலாளராக உள்ள நடராஜன் என்பவருக்கு வாய்ப்பு வழங்கப்படவுள்ளதாக கட்சியினர் தெரிவிக்கின்றனர். கடந்த முறை அதிமுக தோல்வியுற்ற பழநி, ஆத்தூர் தொகுதிகளை கூட்டணிக் கட்சிகளுக்கு ஒதுக்க அதிமுக தலைமை முடிவு செய்துள்ளதால் ஒட்டன்சத்திரம் தொகுதிக்கு மட்டும் புதிய வேட்பாளரை தேர்வு செய்ய உள்ளது.

திமுக

ஆத்தூர் தொகுதியில் திமுக மாநில துணைப்பொதுச்செயலாளர் ஐ.பெரியசாமி தொடர்ந்து போட்டியிட்டு, வெற்றிபெற்றும் வருகிறார். எனவே திமுக சார்பில் இவரே இந்தமுறையும் ஆத்தூர் தொகுதியில் போட்டியிட உள்ளார். ஒட்டன்சத்திரம் தொகுதியில் தொடர் வெற்றிகளை பெற்றுவரும் திமுக கொறடா அர.சக்கரபாணி மீண்டும் அதே தொகுதியில் போட்டியிடுவது உறுதியாகிவிட்டது.

பழநி தொகுதி எம்.எல்.ஏ.வாக கடந்த தேர்தலில் தேர்வு செய்யப்பட்டவர் திமுக கிழக்கு மாவட்டச் செயலாளர் இ.பெ.செந்தில்குமார். இவர் இந்த முறையும் பழநி தொகுதியில் போட்டியிட கட்சித் தலைமையிடம் விருப்பமனு கொடுத்துள்ளார். இவருக்கே பழநியில் போட்டியிட மீண்டும் வாய்ப்பு வழங்கப்பட உள்ளது.

நத்தம் தொகுதி எம்.எல்.ஏ.வாக கடந்தமுறை தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டி அம்பலத்திற்கு கட்சி செல்வாக்கு டன், சமுதாய செல்வாக்கும் உள்ளதால் இந்தமுறையும் திமுக சார்பில் போட்டியிட இவருக்கு வாய்ப்பு வழங்கப்பட உள்ளது. திமுகவில் தற்போது எம்.எல்.ஏ., வாக உள்ள நால்வரும் மீண்டும் அதே தொகுதிகளில் போட்டியிடுவது உறுதியாகிவிட்டது.

கடந்தமுறை கூட்டணியில் காங்கிரஸ் போட்டியிட்ட வேடசந்தூர் தொகுதி யில் இந்தமுறை திமுக களம் இறங்க உள்ளது. இந்த தொகுதியில் முன்னாள் துணை சபாநாயகர் காந்திராஜன், ஒன்றிய செயலாளர் வீராசாமிநாதன் ஆகியோர் சீட் பெறுவதில் கடும் முயற்சி மேற்கொண்டு வருகின்றனர்.

நிலக்கோட்டை தொகுதி இடைத்தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட்டு தோல்வியடைந்த சவுந்திர பாண்டியனுக்கு மீண்டும் போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட உள்ளது.

திண்டுக்கல் தொகுதியில் வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சி.சீனிவாசனை எதிர்த்து போட்டியிட வலுவான வேட்பாளரை களம் இறக்க திமுக தலைமை முடிவு செய்துள்ளது. இதில் முன்னாள் நகராட்சித் தலைவர் நடராஜன், முன்னாள் ஒன்றிய தலைவர் சந்திரசேகரன் ஆகியோரில் ஒருவருக்கு வாய்ப்பு வழங்கப்பட உள்ளதாகவும் கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x