Published : 07 Mar 2021 03:16 AM
Last Updated : 07 Mar 2021 03:16 AM

போடியை கல்வி நகரமாக மாற்றிய ஓபிஎஸ் - துணை முதல்வருக்கு ‘ஹாட்ரிக்’ வெற்றி கிடைக்குமா?

போடி சட்டப்பேரவை தொகுதி மலைக் கிராமங்கள் நிறைந்த பகுதியாக உள்ளது. இத்தொகுதியில் போடி நகராட்சி, போடிநாயக்கனூர் ஊராட்சி ஒன்றியம், பழனிசெட்டிபட்டி, பூதிப்புரம், குச்சனூர், வீரபாண்டி, மார்க்கையன்கோட்டை, மேலச்சொக்கநாதபுரம், போ.மீனாட்சிபுரம் ஆகிய பேரூராட்சிகள் இதில் இடம்பெற்றுள்ளன.

1957 முதல் 2016 வரை நடைபெற்ற 14 தேர்தல்களில் காங்கிரஸ் 4 முறையும், திமுக.3 முறையும், அதிமுக 7 முறையும் வெற்றி பெற்றுள்ளன. முன்னாள் முதல்வர் ஜெயலலிதா இத்தொகுதியில் 1989-ம் ஆண்டு போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார். மாவட்டத்தில் அதிமுகவின் நம்பிக்கைக்குரிய தொகுதியாகவே போடி இருந்து வருகிறது.

இத்தொகுதியில் ஆண் வாக்காளர்கள் 1 லட்சத்து 36 ஆயிரத்து 50 பேரும், பெண் வாக்காளர்கள் 1 லட்சத்து 41 ஆயிரத்து 893 பேரும், மூன்றாம் பாலினத்தவர் 21 பேரும் என மொத்தம் 2 லட்சத்து 77 ஆயிரத்து 964 வாக்காளர்கள் உள்ளனர். வரும் சட்டப்பேரவைத் தேர்தலுக்காக இத்தொகுதியில் மும்முனைப் போட்டி இருக்கலாம் என்ற எதிர்பார்ப்பு உள்ளது.

அதிமுக.வின் ஆட்சிமன்றக்குழு முடிவின்படி முதற்கட்ட வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இதில் போடி தொகுதி வேட்பாளராக ஓ.பன்னீர்செல்வம் அறிவிக்கப்பட்டுள்ளார். திமுக சார்பில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் லட்சுமணன், வடக்குமாவட்ட பொறுப்பாளர் தங்கதமிழ்ச்செல்வன் உள்ளிட்ட சிலர் விருப்பமனு தாக்கல் செய்துள்ளனர். இதே போல் அமமுக சார்பில் நகரச் செயலாளர் ஞானவேல் உள்ளிட்டோரும் போட்டியிட தயாராக உள்ளனர்.

துணை முதல்வர்

அதிமுக வேட்பாளராக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் போடி தொகுதியில் தற்போது மூன்றாவது முறையாக போட்டியிடுகிறார். அருகில் உள்ள பெரியகுளம் தொகுதியில்தான் இவரின் அரசியல் வளர்ச்சி தொடங்கியது. 1996-ம் ஆண்டு நடந்த உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட்டு பெரியகுளம் நகராட்சித் தலைவராக தேர்வு செய்யப்பட்டார். பின்பு 2001ம் ஆண்டு பெரியகுளத்தில் சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார். வருவாய்த்துறை அமைச்சர், பொதுப்பணித்துறை அமைச்சர் மற்றும் முதல்வர் உள்ளிட்ட பொறுப்புகளில் இருந்தார். 2006-ல் பெரியகுளத்தில் இரண்டாம் முறையாக வெற்றி பெற்றார். சட்டமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவர், எதிர்க்கட்சி துணைத் தலைவர் போன்ற பொறுப்புகளை வகித்தார். பெரியகுளம் தொகுதி தனித்தொகுதியாக மாற்றப்பட்டதால் 2011-ம் ஆண்டு அருகில் உள்ள போடி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். கடந்த 2016-ம் ஆண்டு நடந்த தேர்தலில் இத்தொகுதியில் இரண்டாம் முறையாக வெற்றி பெற்றுள்ளார்.

அரசு கல்வி நிலையங்கள்

கால்நடை, பொறியியல் மற்றும் சட்டக்கல்லூரி, ஐடிஐ, பாலிடெக்னிக், செவிலியர் கல்லூரி போன்ற ஏராளமான அரசு கல்வி நிலையங்களை ஓ.பன்னீர்செல்வம் இத்தொகுதிக்கு கொண்டு வந்துள்ளார். மாவட்டத்தின் எந்த தொகுதியிலும் இல்லாத அளவிற்கு இத்தொகுதியில் அரசு கல்வி நிலையங்களின் எண்ணிக்கை அதிகம் உள்ளது.

டாப் ஸ்டேஷன் சாலை அமைப்பதற்கான அரசாணை வெளியீடு, 18-ம் கால்வாய் நீட்டிப்பு உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை இங்கு ஓபிஎஸ் நிறைவேற்றியுள்ளார். எனவே மூன்றாம் முறையாக ஹாட்ரிக் வெற்றி பெறுவார் என்ற நம்பிக்கை அதிமுக.வில் உள்ளது.

இருப்பினும் சீர்மரபினர், சிறுபான்மையினர் உள்ளிட்ட சில சமுதாய மக்களின் எதிர்ப்பு ஆங்காங்கே உள்ளது. அமைச்சர்களுக்கு எதிராக திமுக வலுவான வேட்பாளர்களை நிறுத்துவதற்கான நடவடிக்கைகளை தொடங்கியுள்ளது. மேலும் இந்த முறை எப்படியும் வெற்றிபெற்றே தீர வேண்டும் என்ற முனைப்பில் திமுக உள்ளது. எனவே போட்டி கடுமையாகவே இருக்கும். இருப்பினும் இத்தொகுதியில் செய்த ஏராளமான வளர்ச்சிப் பணிகளும், செயல்படுத்திய திட்டங்களும் வெற்றிக்கு கைகொடுக்கும் என்ற நம்பிக்கையில் அதிமுகவினர் உள்ளனர்.

திமுக வேட்பாளர்கள் தேர்வு, தேர்தல் பிரச்சாரம், அமமுகவின் வியூகம், அதிமுகவின் உத்வேகச் செயல்பாடு, துணை முதல்வர் தொகுதி போன்றவற்றினால் போடி தொகுதி மாநில அளவிலான கவன ஈர்ப்பைப் பெற்றுள்ளது. மற்ற கட்சிகளிலும் வேட்பாளர்கள் அறிவித்த பிறகு இத்தொகுதியில் பிரச்சாரம் களைகட்ட உள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x