Published : 07 Mar 2021 03:16 AM
Last Updated : 07 Mar 2021 03:16 AM

தொடங்கியது கோடை காலம்; விற்பனைக்கு குவிந்தது தர்பூசணி: மகசூல் காலத்தில் பெய்த மழையால் வளர்ச்சி குன்றிய பழங்கள்

தற்போது வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளதால் தர்பூசணி விற்பனை களைகட்டத் தொடங்கியுள்ளது. இருப்பினும் இந்த ஆண்டு மகசூல் பருவத்தில் பெய்த மழையால் வழக்கத்தைவிட அளவு குறைந்து சிறிய பழங்களாக வந்துள்ளதால் வியாபாரிகள் வருத்தமடைந்துள்ளனர்.

கோடையில் எளியோருக்கும் தாகம் தணிக்கும் பழமாக தர்பூசணி இருந்து வருகிறது. இவை பெரும்பாலும் திண்டிவனம், செங்கல்பட்டு, மேல்மருவத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் அதிகம் விளைகிறது. அதிக வெப்பத்துடன் கூடிய மண்ணில் இது நன்கு விளையும். ஆண்டு முழுவதும் விளைந்தாலும் கோடையிலே இதன் தேவை அதிகம் இருப்பதால் பிப்ரவரி, மார்ச்சில் பலன் தரும் வகையில் நடவு செய்யப்படுகிறது. நீர்ச்சத்து அதிகம் கொண்ட இப்பழத்தில் வைட்டமின் சி உள்ளிட்ட பல்வேறு சத்துக்கள் அடங்கி உள்ளன.

மார்ச், ஏப்ரல், மே மாதங்களில் இப்பழங்களின் வரத்து அதிகம் இருக்கும். இந்த ஆண்டு ஜனவரி இறுதியிலே மாவட்டத்தின் பல பகுதிகளுக்கு வரத் தொடங்கி விட்டன. இருப்பினும் கடந்த ஜனவரி மாதத்தில் எதிர்பாராதவிதமாக திடீர் மழை பெய்து பருவநிலையில் மாற்றம் ஏற்பட்டது. இரவில் பனியும், பகலிலும் குளிர்ச்சியான பருவநிலையாக இருந்ததால் தர்பூசணியின் வரத்தும், விற்பனையும் குறைவாக இருந்தது.

தற்போது பனி குறைந்து, பகலில் வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளதால் பலரும் இதனை ஆர்வமுடன் வாங்கி உண்கின்றனர். இதனால் கடந்த இரண்டு வாரங்களாக விற்பனை அதிகரித்து வருகிறது.

தேனி, சின்னமனூர், கம்பம், கூடலூர் உள்ளிட்ட பகுதிகளின் வழிநெடுகிலும் இவை குவித்து வைக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. கேரள சுற்றுலாப் பயணிகள் பலரும் இவற்றை ஆர்வமுடன் வாங்கிச் செல்கின்றனர்.

இது குறித்து கம்பம் வியாபாரி பாண்டியன் கூறுகையில், தர்பூசணியை கிலோ ரூ.20-க்கு விற்பனை செய்கிறோம். தவிர கீற்று ரூ.10-க்கு தருகிறோம். மகசூல் பருவத்தில் மழை பெய்ததால் வளர்ச்சி குறைவாக உள்ளது. இருப்பினும் இனிப்பும், நீர்ச்சத்தும் நிறைந்து காணப்படுவதால் சிறந்த தாக நிவாரணியாக உள்ளது. குளிர்பானம் போன்றவற்றில் வேதியியல் கலப்பு உள்ளதால் பலரும் இதனை ஆர்வமாக உண்கின்றனர். இரவில் இப்பழங்களை நன்கு மூடி வைத்துவிட்டு காவலுக்கும் ஒரு ஆள் இருக்க வேண்டியதுள்ளது என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x