Published : 07 Mar 2021 03:16 AM
Last Updated : 07 Mar 2021 03:16 AM

தேர்தல் பிளாஷ்பேக்: தலைவர்கள் கண்டிராத சாதனை வெற்றியை சாமானியனுக்கு தந்த நத்தம் தொகுதி மக்கள்

திண்டுக்கல்

தேர்தல்களில் தொடர் வெற்றி என்பது அரசியலில் பிரபலமாக இருந்த பலருக்கு சாத்தியப்படவில்லை. திமுக தலைவர் கருணாநிதி, அதிமுக நிறுவனத் தலைவர் எம்.ஜி.ஆர். ஆகியோர் தொடர் வெற்றிகளை பெற்றாலும், இவர்கள் ஒரே தொகுதியில் நின்று இந்தச் சாதனையை புரியவில்லை. தொகுதிகள் மாறி மாறி நின்று தொடர் வெற்றி பெற்றனர்.

ஆனால் பிரபலம் இல்லாத பேச்சாற்றல் இல்லாத, சினிமா மூலம் மக்களை கவராத ஒரு சாமானியனுக்கு நத்தம் தொகுதி மக்கள் தொடர்ந்து வெற்றியை தந்தனர். இறக்கும் வரை அவரே எம்.எல்.ஏ., அவர்தான் நத்தம் தொகுதியில் ஆறு முறை வெற்றி பெற்ற ஆண்டி அம்பலம்.

திண்டுக்கல் மாவட்டம் நத்தம் தொகுதியில் 1977-ம் ஆண்டு தேர்தலில் காங்கிரஸ் சார்பில் களம் இறங்கினார் விவசாய குடும்பத்தை சேர்ந்த ஆண்டி அம்பலம். எளிமையான தோற்றம், மேடைப்பேச்சில் ஒரு சில நிமிடங்களே பேசுவார். மக்களை கவரும்வகையில் மேடைப் பேச்சு இவருக்கு வரவில்லை. இவரது எதார்த்தமான பேச்சு, எளிமையான வாழ்க்கை மக்களை கவர, முதன்முறையாக இவரை தேர்வு செய்தனர்.

அன்று மக்கள் இவருக்கு வழங்கிய வெற்றியை இறக்கும் வரை தொடர்ந்து கொடுத்து வந்தனர். ஒரு முறை இரண்டு முறை அல்ல தொடர்ந்து ஆறு முறை (1977, 1980, 1984, 1989, 1991, 1996 ஆகிய தேர்தல்கள்) நத்தம் தொகுதி எம்.எல்.ஏ.,வாக தேர்வு செய்யப்பட்டார். கட்சிகளுக்கு அப்பாற்பட்டு ஆண்டி அம்பலத்துக்காக ஓட்டளித்து தேர்ந்தெடுத்தனர். முதல் வெற்றிக்கு பிறகு இவர் எளிமையானவர், எதார்த்தவாதி என்ற எண்ணம் நத்தம் தொகுதி மக்களின் மனதில் பதிந்ததால் தொடர் வெற்றி சாத்தியமானது.

ஓட்டு எண்ணிக்கையின்போது தனக்கு வெற்றிமுகம் என்று தகவல் வந்தால் மட்டுமே வேட்பாளர்கள் சிலர் ஓட்டு எண்ணும் மையத்திற்கு வருவர். ஆனால் இவர் ஓட்டு எண்ணிக்கை தொடங்கும் முன்னரே அங்கு ஆஜராகிவிடுவார்.

ஒரு முறை பழநியிலுள்ள கல்லூரியில் நத்தம் தொகுதிக்கான ஓட்டு எண்ணி்கை நடந்துகொண்டிருந்தது. பட்டு வேட்டி, மஞ்சள் வண்ண ஜிப்பா, கழுத்தில் துண்டு அணிந்து அறைக்கு வெளியே நாற்காலியில் அமர்ந்திருந்தார். அப்போது ஓட்டுச்சீட்டு எண்ணும் முறை. முதல் சுற்று முடிவில் வெளியில் வந்த காங்கிரஸ் முகவர் ஒருவர் அவரிடம், ‘ஐயா, நாமதான் 500 ஓட்டுக்கள் முன்னிலையில் உள்ளோம்’ என கூற, அதற்கு ஆண்டி அம்பலம், ‘போடா போடா நான் ஜெயிக்காம, வேறு யாருடா ஜெயிக்கப்போறா’ என்று கூறியுள்ளார். தனது மக்கள் தன்னை கைவிட மாட்டார்கள் என்ற தன்னம்பிக்கை அவரிடம் எப்பொழுதும் இருந்தது.

இவர் மக்களை நம்பினார், மக்களும் இவரை நம்பினர். தொடர்ந்து நத்தம் தொகுதியில் தோல்விகளை தழுவிய திமுகவினர் மனமுடைந்து, ‘நாடே திருந்தினாலும் நத்தம் திருந்தாது’ என வாசகங்களை சுவர்களில் எழுதிவைத்த காலமும் உண்டு.

அந்த அளவிற்கு இவரை எதிர்த்தவர்கள் எத்தனை கூட்டணி அமைத்து வந்தாலும் இவர் இருக்கும் வரை தோற்கடிக்க முடியவில்லை. 1999-ம் ஆண்டு இவர் மறைவால் நத்தம் தொகுதிக்கு இடைத்தேர்தல் வந்தது. அப்போது தான் முதன்முறையாக அதிமுக சார்பில் போட்டியிட்ட நத்தம் ஆர்.விசுவநாதன் வெற்றிபெற்று நத்தம் தொகுதியை அதிமுக வசமாக்கினார். இதையடுத்து முதன்முறையாக 2016 தேர்தலில் திமுக சார்பில் இறந்த ஆண்டி அம்பலத்தின் மகன் ஏ.ஆண்டி அம்பலத்தை நிறுத்தி (மகன் பெயரும் ஆண்டி அம்பலம்) நத்தம் தொகுதியில் தனது முதல் வெற்றியை பெற்றது.

நத்தம் தொகுதியில் 40 ஆண்டுகளாக வெற்றிபெற முடியாத திமுக, அவரது மகனை 2016 தேர்தலில் களம் இறக்கி வெற்றி பெற்றது. இதற்கு மறைந்த எம்.எல்.ஏ. ஆண்டி அம்பலத்தின் மீதான மதிப்பும், மரியாதையும் இன்றும் மக்களிடம் இருந்துகொண்டு இருப்பது தான் காரணம்.

இறந்து 22 ஆண்டுகள் ஆன நிலையிலும் இன்னமும் அவரது பெயரை நினைவுகூர்ந்து வருகின்றனர் சாமானியனுக்கு சாதனை வெற்றியை தந்த நத்தம் தொகுதி மக்கள்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x