Published : 07 Mar 2021 03:16 AM
Last Updated : 07 Mar 2021 03:16 AM

அதிமுகவின் கோட்டையாக உள்ள நிலக்கோட்டை: 44 ஆண்டுகளாக வெற்றிக்கு போராடும் திமுக

தொடர்ந்து வெற்றிகண்ட தொகுதி என்பதால் அதிமுக தனது முதல் வேட்பாளர் பட்டியலிலேயே வேட்பாளரை அறிவித்து இந்தமுறையும் வெற்றி நமதே என களம் இறங்கியுள்ளது. கடந்த 44 ஆண்டுகளாக நிலக்கோட்டை தொகுதியை கைப்பற்ற போராடி வரும்நிலையில் இம்முறையாவது கைப்பற்றிவிட வேண்டும் என்ற துடிப்பில் திமுகவினர் தங்கள் தேர்தல் பணிகளை தொடங்கியுள்ளனர்.

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ஏழு தொகுதிகளில் அதிமுகவிற்கு சாதகமான தொகுதி நிலக்கோட்டை ஆகும். எம்.ஜி.ஆர். கட்சி தொடங்கிய காலம் முதல் இந்த தொகுதியில் திமுக வெற்றி பெற்றதே இல்லை.

இதனால் கூட்டணிக் கட்சிக்கு ஒதுக்கி இந்த தொகுதியில் இருந்து திமுக ஒதுங்கியே நின்றது. போட்டியிட்ட தேர்தல்களிலும் தொடர்ந்து இத்தொகுதியில் தோல்வியைத்தான் தழுவியுள்ளது. இருந்தபோதும் இந்ததொகுதியில் வென்றே ஆக வேண்டும் என்ற முனைப்போடு கடந்த இருதேர்தல்களில் இருந்து திமுகவே நேரடியாக போட்டியிட்டு வருகிறது. நடைபெறவுள்ள தேர்தலிலும் நிலக்கோட்டையை கூட்டணிக்கட்சிக்கு ஒதுக்காமல் திமுகவே நேரடியாக அதிமுகவை எதிர்கொள்ள உள்ளது.

அதிமுக வேட்பாளராக தேன்மொழி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இவரை எதிர்த்து இடைத்தேர்தலில் போட்டியிட்டு வெற்றிவாய்ப்பை இழந்த வழக்கறிஞர் சவுந்திரபாண்டிக்கு மீண்டும் திமுக சார்பில் வாய்ப்பு வழங்கப்பட உள்ளது.

கடந்தமுறை மக்களவை தேர்தலுடன் நடந்த சட்டசபை இடைத்தேர்தலில் இங்கு அதிமுக வெற்றிபெற்றது. ஆனால் திண்டுக்கல் மக்களவை தொகுதியில் போட்டியிட்ட திமுகவை சேர்ந்த வேலுச்சாமி, நிலக்கோட்டை சட்டசபை தொகுதியில் அதிமுகவை சேர்ந்த தேன்மொழியை விட அதிக வாக்குகள் பெற்றிருந்தார். இதனால் நிலக்கோட்டை தொகுதியை தற்போது கைப்பற்ற முடியும் என்ற எண்ணத்தில் இந்தமுறையும் மீண்டும் திமுகவே போட்டியிட தயாராகி வருகிறது.

நிறைவேறுமா 44 ஆண்டு கால போராட்டம்

நிலக்கோட்டை தொகுதியில் 1971-ம் ஆண்டு முதன்முதலாக திமுக சார்பில் ஏ.முனியாண்டி எம்.எல்.ஏ.,வாக தேர்வு செய்யப்பட்டார். இதையடுத்து எம்.ஜி,ஆர். அதிமுகவை தொடங்கிய பிறகு நடந்த 1977 பொதுத்தேர்தலில் முதன்முறையாக அதிமுக போட்டியிட்டு வெற்றிபெற்றது. இதையடுத்து தொடர்ந்து வெற்றிபெற்று வந்துள்ளது. காங்கிரஸ் கட்சி அதிமுக, திமுக கூட்டணியில் நின்று மாறி மாறி வென்றும் வந்தது. 1977 தேர்தலுக்கு பிறகு திமுக போட்டியிட்டும் வெற்றிபெற முடியவில்லை.

கடந்த 44 ஆண்டுகளாக தங்கள் வசமாகாத நிலக்கோட்டை தொகுதியை இந்த முறை தங்கள் வசமாக்கும் முயற்சியில் திமுகவினர் தற்போதே தேர்தல் பணிகளை தொடங்கி விட்டனர். நத்தம் தொகுதியை 39 ஆண்டுகளுக்கு பிறகு எப்படி கைப்பற்றினோமோ அதேபோல் நிலக்கோட்டை தொகுதியும் எங்கள் வசமாகும் என்கின்றனர் திமுகவினர்.

அதேநேரத்தில் நிலக்கோட்டை தங்கள் கோட்டை என்றும் இதை தொடர்ந்து தக்கவைப்போம் என்று அதிமுகவினர் உறுதி பூண்டுள்ளனர். இதற்கான முடிவை எதிர்நோக்கி நிலக்கோட்டை தொகுதி மக்கள் மட்டுமல்ல அனைத்துக் கட்சியினரும் காத்திருக்கின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x