

தேனி மாவட்டம் ஆண்டிபட்டி தொகுதியில் முன்னாள் முதல்வர்கள் எம்ஜிஆர், ஜெயலலிதா போன்ற பெரும் தலைவர்கள் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளனர். இதனால் இத்தொகுதி மாநில அளவிலான கவனத்தை ஈர்த்து நட்சத்திர அந்தஸ்தைப் பெற்றது. இதற்குப் பிறகு நடிகர் எஸ்.எஸ்.ராஜேந் திரன், கட்சியின் முக்கிய பிரமுகர்கள் தங்கதமிழ்ச்செல்வன், ஆசையன் உள்ளிட்டோரும் வெற்றி பெற்றனர்.
1977 முதல் 2019 வரை நடைபெற்ற 12 தேர்தல்களில் 9 முறை அதிமுக வென்றுள்ளது. இதனால் இங்கு அதிமுக. வலுப்பெற்றதுடன் அக்கட்சியின் நம்பிக்கை மிக்க தொகுதியாகவும் மாறியது. இந்நிலையில் 2019-ம் ஆண்டு இடைத்தேர்தல் நடந்தது. இதில் திமுக.சார்பில் மகாராஜனும், அதிமுக சார்பில் லோகிராஜனும் களம் இறங்கினர். இவர்கள் இருவருமே உடன்பிறந்த அண்ணன்-தம்பி ஆவர்.
சகோதரர்கள் இரண்டுபேர் எதிரெதிர் அணியில் களம் இறங்கியதால் மீண்டும் இத்தொகுதி மாநில அளவிலான கவனத்தை பெற்றது. இத்தேர்தலில் ‘அண்ணன்’ மகாராஜன் வெற்றி பெற்றார். 1996-க்குப் பிறகு இத்தொகுதியை திமுக கைப்பற்றியதால் அக்கட்சியினர் உற்சாகம் அடைந்தனர்.
இதனைத் தொடர்ந்து இத்தொகுதியை தக்க வைக்க மகாராஜன் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார். வளர்ச்சித் திட்டப்பணிகள், கரோனாவின் போது நலத்திட்ட உதவி என்று இவரது செயல்பாடு கட்சித் தலைமைக்கு மிகுந்த நம்பிக்கையை ஏற்படுத்தி உள்ளது. கட்சியில் விருப்பமனு தாக்கல் செய்துள்ள நிலையில் இவர் வேட்பாளராக அறிவிக்கப்படுவதற்கு அதிக வாய்ப்பு உள்ளது.
இதே போல் இவரது ‘தம்பி’ லோகிராஜனும் களப்பணியில் கடந்த ஓராண்டுகளுக்கு மேலாக தீவிரம் காட்டி வருகிறார்.
இவர் ஆண்டிபட்டி ஒன்றியக்குழுத் தலைவராக இருப்பதால் நிதி ஒதுக்கீடு மூலம் கிராமங்களில் பல்வேறு வசதிகளை செய்து தந்துள்ளார். வரும் தேர்தலில் போட்டியிடுவதற்கான முயற்சிகளை இவர் மேற்கொண்டுள்ளார். எனவே இந்த தேர்தலிலும் இருவரும் எதிரெதிரே களம் இறங்கும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
அதிமுக – அமமுக பிரிவால் இத்தொகுதியை பல ஆண்டுகளுக்குப் பிறகு திமுக கைப்பற்றி உள்ளது. இடைத்தேர்தல் வெற்றி சட்டப்பேரவையிலும் எதிரொலிக்கும் என்ற நம்பிக்கை திமுகவினரிடையே உள்ளது.
அதிமுகவைப் பொறுத்தளவில் ஏராளமான திட்டங்கள், வளர்ச்சித் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன. இடைத்தேர்தலில் அமமுக ஓட்டுக்கள் பிரிந்ததால் வெற்றி வாய்ப்பை இழந்தோம். இம்முறை ஆண்டிபட்டி அதிமுக கோட்டை என்பதை மீண்டும் நிரூபிப்போம் என்றனர்.
இருகட்சியினருமே சகோதார வேட்பாளர்கள்தான் இம்முறையும் தேர்தலில் போட்டியிடுவர் என்று தெரிவித்து வருகின்றனர். கடந்த முறை அண்ணன் வென்றார்.
இம்முறை அவரே வெற்றி பெறுவாரா அல்லது அண்ணனின் வெற்றியை இந்தமுறை தம்பி தட்டிப்பறிப்பாரா என்பது தேர்தல் முடிவில்தான் தெரியவரும். இருப்பினும் வெற்றி வாய்ப்பு தங்களுக்குத்தான் என்று அதற்கான பட்டியல்களுடன் இருதரப்புமே பல்வேறு வாதங்களை முன்வைத்து வருகின்றனர்.