Published : 07 Mar 2021 03:16 AM
Last Updated : 07 Mar 2021 03:16 AM

சட்டப்பேரவைத் தேர்தல் சமயத்தில் அமைச்சர் மகனுக்கு அதிமுகவில் முக்கிய பதவி: 100-க்கும் மேற்பட்டோருக்கும் புதிய பதவிகள்

சட்டப்பேரவைத் தேர்தல் அறிவிக் கப்பட்ட நிலையில், சிவகங்கை மாவட்ட அமைச்சரான ஜி.பாஸ் கரனின் மகனுக்கு அதிமுகவில் முக்கியப் பதவி வழங்கப்பட்டுள்ளது. மேலும் 100-க்கும் மேற்பட்டோருக்கு புதிய பதவிகள் வழங்கப்பட்டுள்ளன.

சிவகங்கை நகரச் செயலாளராக இருந்த ஆனந்தன், வடக்கு ஒன்றியச் செயலாளராக இருந்த சந்திரன் ஆகியோர் சில மாதங்களுக்கு முன்பு, கரோனா வைரஸ் தொற்று பாதிப்பால் இறந்தனர். அதன்பிறகு, அப்பணியிடங்களில் அதிமுக தலைமை யாரையும் நியமிக்காமல் இருந்தது.

இந்நிலையில் சட்டப்பேரவைத் தேர்தல் அறிவிக்கப்பட்டதால், தேர்தல் பணிகளில் ஈடுபடுவதற்கு சிவகங்கை நகரம், வடக்கு ஒன்றியத்தில் அதிமுகவுக்குச் சிக்கல் ஏற்பட்டது. இதையடுத்து சிவகங்கை நகர், ஒன்றியப் பதவிகள் உட்பட 100-க்கும் மேற்பட்ட பதவிகளுக்கு புதிதாக நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

அமைச்சர் ஜி.பாஸ்கரனின் மகனும், எம்ஜிஆர் மன்ற இளைஞரணி மாநிலத் துணை அமைப்பாளருமான கருணாகரனுக்கு வடக்கு ஒன்றியச் செயலாளர் பதவி வழங்கப்பட்டுள்ளது. அதேபோல், மாவட்ட மாணவரணிச் செயலாளராக இருந்த ராஜாவுக்கு நகர் செயலாளர் பதவி வழங்கப்பட்டுள்ளது. இதையடுத்து மாவட்ட மாணவரணிச் செயலாளராக சுந்தரலிங்கம் நியமிக்கப் பட்டுள்ளார்.

சிங்கம்புணரி பேரூர் கழகச் செயலாளர் ராஜா ஓராண்டுக்கு முன்பு இறந்தார். இந்நிலையில் அப் பதவியில் சிங்கம்புணரி வடக்கு ஒன்றியச் செயலாளராக இருந்த வாசு நியமிக்கப்பட்டுள்ளார். இதையடுத்து வடக்கு ஒன்றியச் செயலாளராக திரு வாசகம் நியமிக்கப்பட்டுள்ளார்.

இதேபோல், திமுகவில் இருந்து விலகி அதிமுகவில் சேர்ந்த நாடக நடிகரான ஜெகநாதனுக்கு, மாவட்ட கலைப்பிரிவு தலைவர் பதவி வழங்கப்பட்டுள்ளது. அப்பிரிவுக்கு மாவட்டச் செயலாளராக செந்தில்முருகன், காரைக்குடி நகர மகளிரணிச் செயலாளராக சுலோச்சனா ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். இதேபோல் மாவட்டம் முழுவதும் நூற்றுக்கும் மேற்பட்ட நிர்வாகிகள் புதிதாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x