

தமிழக வெள்ள நிவாரணத்துக்கு ரூ. 939 கோடியே 63 லட்சத்தை வழங்கியுள்ள மத்திய அரசுக்கு தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் நன்றி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், ''தமிழக வெள்ள நிவாரணத்துக்கு ரூ. 2 ஆயிரம் கோடி வழங்க வேண்டும் என முதல்வர் ஜெயலலிதா கோரிக்கை விடுத்த சில மணி நேரங்களில் உடனடி நிவாரணமாக ரூ. 939 கோடியே 63 லட்சத்தை மத்திய அரசு ஒதுக்கியுள்ளது.
இது தமிழக மக்களின் மீது மத்திய அரசு கொண்டுள்ள அக்கறையை வெளிப்படுத்துகிறது. இதற்காக தமிழக பாஜக சார்பில் பிரதமர் நரேந்திர மோடிக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
மலேசிய - இந்தியர்களிடையே பேசிய பிரதமர் மோடி தமிழில் தனது உரைடை தொடங்கியதோடு, திருக்குறளை மேற்கோள் காட்டி பேசியுள்ளார். ஆனால், இது குறித்து தமிழகத்தில் யாரும் ஒருவார்த்தை கூட பேசவில்லை. இது வருத்தம் அளிக்கிறது'' என்று தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.