Published : 07 Mar 2021 03:17 AM
Last Updated : 07 Mar 2021 03:17 AM

கூட்டணி கட்சிகளையும் மதிக்க மாட்டார்கள், கூட்டணி தர்மத்தையும் காக்க மாட்டார்கள்: திமுக மீது தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் குற்றச்சாட்டு

தி.மலை அடுத்த வேங்கிக்காலில் நடைபெற்ற சட்டப்பேரவை தொகுதி வாக்குச்சாவடி பொறுப்பாளர்கள் கூட்டத்தில் பேசும் தமிழக பாஜக தலைவர் எல்.முருகன். அருகில், மாநில வர்த்தகர் அணி துணைத் தலைவர் தணிகைவேல் உள்ளிட்டோர்.

திருவண்ணாமலை

கூட்டணி கட்சிகளையும் மதிக்க மாட்டார்கள், கூட்டணி தர்மத்தையும் காக்க மாட்டார்கள் என திமுக மீது தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் குற்றஞ்சாட்டினார்.

பாஜக சார்பில் தி.மலை சட்டப்பேரவைத் தொகுதி வாக்குச்சாவடி பொறுப்பாளர்கள் கூட்டம் திருவண்ணாமலையை அடுத்த வேங்கிக்காலில் நேற்று நடைபெற்றது. மாநில வர்த்தகர் அணி துணைத் தலைவர் தணிகைவேல் தலைமை வகித்தார். தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் சிறப்புரையாற்றினார்.

முன்னதாக அவர் செய்தியாளர் களிடம் கூறும்போது, “நாகர் கோவிலில் நாளை (இன்று) நடைபெறும் ‘வெற்றி கொடி ஏந்தி வெல்வோம் தமிழகம்’ என்ற பிரம்மாண்ட பேரணியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கலந்துகொள்கிறார்.

அதிமுக கூட்டணியில் பாஜகவுக்கு ஒதுக்கப்பட்டுள்ள 20 தொகுதிகளிலும் வெற்றி பெறுவதுதான் எங்களது இலக்கு. அதேபோல், தேசிய ஜனநாயக கூட்டணியில் இடம் பெற்றுள்ள கட்சிகளின் வெற்றிக்காகவும் பாடுபடுவோம். தமிழக சட்டப்பேரவைக்குள் திமுக வரக்கூடாது என்பதில் குறியாக உள்ளோம்.

நம்முடைய தமிழ் சொந்தங்கள் ஒன்றரை லட்சம் பேர் கொத்து கொத்தாக கொல்லப்பட்டபோது திமுக வேடிக்கைப் பார்த்தது. அவர்களை கொன்று குவித்தது திமுகவும், காங்கிரஸ் கட்சியும்தான். அவர்களது செயலை தமிழ் சமுதாயமும், இளைய சமுதாயமும் உணர்ந்துள்ளனர். இதன் எதிரொலியாகதான், அவர்களுக்கு மிகப் பெரிய தோல்வியை கொடுத்தனர். அந்த தோல்வியை இப்போதும் கொடுப்பார்கள். தமிழ் கடவுள்களுக்கு எதிரானவர்கள். கந்த சஷ்டி கவசத்தை இழிவுப்படுத்திய கருப்பர் கூட்டம், திமுகவின் பின்னணியில் இருந்தது. இதனை எதிர்த்துதான், வெற்றி வேல் யாத்திரையை பாஜக நடத்தியது. வெற்றிவேல் யாத்திரை பாஜவுக்கு சிறப்பான வெற்றியை கொடுத்தது.

t1

தமிழ் கடவுள், தமிழ் பண்பாடு, தமிழ் கலாச்சாரத்துக்கு எதிராக திமுக செயல்படுகிறது. தமிழகத்துக்கும், தமிழர்களின் வளர்ச்சிக்கு எதிராகவும் செயல்படுகின்றனர். திமுகவின் இருண்ட ஆட்சி மீண்டும் வரக்கூடாது என தமிழக மக்கள் உள்ளனர். திமுகவுக்கு தகுந்த பாடத்தை தமிழக மக்கள் புகட்டுவார்கள். எந்தெந்த தொகுதிகளில் பாஜக போட்டியிடும் என பேச்சுவார்த்தையின் மூலம் முடிவு செய்யப்படும். இரட்டை இலக்கு எண்ணிக்கையில், தமிழக சட்டப்பேரவைக்கு பாஜகவினர் செல்வார்கள். கூட்டணி கட்சிகளை திமுக மதிப்பதில்லை. திமுக கூட்டணி எப்போது வேண்டுமானாலும் உடையும். கூட்டணி தர்மத்தை காக்கமாட்டார்கள். தமிழகத்தில் வளர்ந்து வரும் கட்சி பாஜக. அதற்கு தகுந்தாற்போல், தொகுதிகள் பெறப்பட்டுள்ளன. அதிமுகவுடன் அமமுக இணைவது என்பது அவர்களது உட்கட்சி விவகாரம்.

தமிழகம், கேரளா, மேற்கு வங்கம் மற்றும் அசாம் மாநிலங்களில் விவசாயிகள் போராட்டம் நடைபெறவில்லை. விவசாயிகளை போராட வைக்க திமுக பல்வேறு முயற்சிகளை செய்தது. விவசாயி களின் ஒத்துழைப்பு இல்லாததால், அவர்களது முயற்சி முறியடிக்கப்பட்டதால் தோல்வியை சந்தித்துள்ளனர். பெட்ரோல், டீசல் விலையை, சர்வதேச சந்தை விலையின் அடிப்படையில் எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயம் செய்கின்றனர். விலை உயர்வை மத்திய அரசும் கவனத்தில் கொண்டுள்ளது. தமிழகத்தில் வாரிசு அரசியல் வெற்றி பெறாது. கட்சி மேலிடம் ஒதுக்கும் தொகுதியில் நான் போட்டியிடுவேன்” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x