Published : 06 Mar 2021 11:59 PM
Last Updated : 06 Mar 2021 11:59 PM

காங்கிரஸ் - திமுக கூட்டணி இழுபறி முடிவுக்கு வந்தது: கன்னியாகுமரி மக்களவைத் தொகுதியும் உடன்பாடு

சென்னை

திமுக கூட்டணியில் பெரிய கட்சியான காங்கிரஸ் கட்சியுடன் இழுபறி நீடித்த நிலையில், மக்கள் நீதி மய்யம் பக்கம் காங்கிரஸ் செல்லுமா என்கிற நிலையில், காங்கிரஸ் - திமுக கூட்டணிப் பேச்சுவார்த்தை சுமுகமாக முடிந்தது. ஸ்டாலின் இல்லத்தில் உடன்பாடு ஏற்பட்டதாகத் தெரிகிறது. கன்னியாகுமரி மக்களவைத் தொகுதியும் காங்கிரஸுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.

திமுக கூட்டணியில் பெரிய கட்சியான காங்கிரஸ் கட்சிக்கு கவுரவமான எண்ணிக்கையில் தொகுதிகள் கிடைக்காததால் வருத்தத்தில் இருந்தது. திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சி கேட்ட தொகுதிக்கும், திமுக சொன்ன தொகுதிக்கும் மலைக்கும் மடுவுக்கும் உள்ள வித்தியாசம் இருந்தது.

இதுபோன்ற ஒரு சூழ்நிலையை நான் எந்தக் காலத்திலும் சந்தித்தது இல்லை என செயற்குழுக் கூட்டத்தில் தமிழக காங்கிரஸ் கட்சித் தலைவர் கே.எஸ்.அழகிரி கண்கலங்கிக் கூறும் அளவுக்கு காங்கிரஸ் கட்சியின் சுயமரியாதை கேள்விக்குள்ளாகியது என்கிற கருத்து பரவலாகப் பேசப்பட்டது.

திமுக கூட்டணியில் தொகுதிப் பங்கீட்டுப் பேச்சுவார்த்தையின்போது தொகுதி எண்ணிக்கையில் ஏற்பட்ட மாறுபட்ட கருத்து காரணமாக தொடர்ந்து இழுபறி நீடித்து வந்தது. காங்கிரஸ் கட்சிக்கு 18 தொகுதிகளுக்கு மேல் தருவதில்லை என்பதில் திமுக பிடிவாதம் காட்டுவதால் தொடர்ந்து இழுபறி நீடித்தது. ஆரம்பத்தில் 12 தொகுதிகளுக்கு மேல் கேட்ட விசிக, இந்தியக் கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட், மதிமுக உள்ளிட்டோருக்கு திமுக கொடுத்த பதில் 4 தொகுதிகள் என்பதே.

54 தொகுதிகளை காங்கிரஸ் கேட்க 18 தொகுதிகள் என திமுக நிற்க, பேச்சுவார்த்தை இழுபறியானது. இதனால் காங்கிரஸ் கட்சி திமுக கூட்டணியில் நீடிக்குமா என்கிற கேள்வி எழுந்தது. இந்நிலையில் இன்று (மார்ச் 6) மதியம் முதல் தேனாம்பேட்டையில் உள்ள நட்சத்திர ஓட்டலில் பேச்சுவார்த்தை நடந்தது.

அதில் காங்கிரஸுக்கு 25 தொகுதிகளும், கன்னியாகுமரி மக்களவைத் தொகுதியையும் காங்கிரஸுக்கே அளிப்பது என உடன்பாடானதாகத் தெரிகிறது. மார்ச் 7-ம் தேதி ஸ்டாலின் திருச்சி பொதுக்கூட்டத்துக்குச் செல்வதால் இரவே கூட்டணி ஒப்பந்தந்தைப் போட்டு முடித்துவிடலாம் என திமுக தரப்பில் தெரிவிக்க, திமுக தலைவர் ஸ்டாலின் வீட்டுக்கு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி, மேலிடப் பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவ் உள்ளிட்ட முக்கியத் தலைவர்கள் வந்தனர்.

அவர்கள் நீண்ட நேரம் ஆலோசனை நடத்தினர். பின்னர் வெளியே வந்த மேலிடப் பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவ் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், ''கூட்டணி உறுதியானது. தலைவர்கள் அனைவரும் பேசினோம். நாளை (மார்ச் 7) காலை 10 மணிக்கு உடன்பாடு கையெழுத்தாகிறது. அப்போதே உங்களுக்கு எத்தனை தொகுதிகள் உள்ளிட்ட விவரங்களை தெரிவிக்கிறோம்'' என்று தெரிவித்தார்.

இதன்மூலம் கடந்த சில நாட்களாக நீடித்துவந்த பெரிய இழுபறி முடிவுக்கு வந்தது. நாளை திருச்சி கூட்டத்துக்குச் செல்வதை ஒத்தி வைத்துவிட்டு ஸ்டாலின் ஒப்பந்தத்தில் கையெழுத்திடுகிறார். காலை 10 மணிக்கு அறிவாலயத்தில் இந்நிகழ்வு நடப்பதை காங்கிரஸ் தலைவர்களும் உறுதிப்படுத்திவிட்டுச் சென்றுள்ளனர்.

திமுக கூட்டணியில் தொகுதிப் பங்கீட்டில் மிச்சம் இருப்பது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் சிறிய கட்சிகள் மட்டுமே. அதுவும் மார்ச் 8-ம் தேதிக்குள் முடிவுக்கு வந்துவிடும் எனத் தெரிகிறது. இதன் மூலம் திமுக தோழமைக் கட்சிகள் மீண்டும் ஒன்றுபட்டுத் தேர்தலைச் சந்திக்கின்றன. பலம் வாய்ந்த கூட்டணியாக தேர்தல் களத்திற்கு திமுக அணி வருகிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x