Published : 06 Mar 2021 07:47 PM
Last Updated : 06 Mar 2021 07:47 PM

திமுக - மதிமுக இழுபறி முடிவுக்கு வந்தது: உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட ஒப்புதல்

திமுக கூட்டணியில் இழுபறியில் இருந்த கட்சிகளில் ஒன்றான மதிமுகவுடன் திமுக உடன்பாடு கண்டுள்ளது. அதன்படி தனிச்சின்னம் என முரண்டு பிடித்துவந்த மதிமுக உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட ஒப்புக்கொண்டது. 6 தொகுதிகள் உடன்பாடாகியுள்ளன.

திமுக கூட்டணியில் தொகுதிப் பங்கீட்டுப் பேச்சுவார்த்தையின்போது தொகுதி எண்ணிக்கையில் ஏற்பட்ட மாறுபட்ட கருத்து காரணமாக தொடர்ந்து இழுபறி நீடித்து வருகிறது. காங்கிரஸ் கட்சிக்கு 18 தொகுதிகளுக்கு மேல் தருவதில்லை என்பதில் திமுக பிடிவாதம் காட்டுவதால் தொடர்ந்து இழுபறி நீடிக்கிறது. ஆரம்பத்தில் 12 தொகுதிகளுக்கு மேல் கேட்ட விசிக, இந்தியக் கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட், மதிமுக உள்ளிட்டோருக்கு திமுக கொடுத்த பதில் 4 தொகுதிகள் என்பதே.

இதனால் இழுபறியான பேச்சுவார்த்தையில் முதலில் 6 தொகுதிகளுக்கு ஒப்புக்கொண்ட விசிக உடன்பாட்டில் கையெழுத்திட்டது. ஆனாலும், தனிச் சின்னத்தில்தான் போட்டி என முடிவானது. ஆனால், தொடர்ந்து மற்ற 3 கட்சிகளுக்கும் இழுபறி நீடித்தது. நிலைமை உணர்ந்து லட்சியம்தான் முக்கியம் என 6 தொகுதிகளுக்கு இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியும் ஒப்புக்கொண்டு கையெழுத்திட்டது.

பின்னர் இன்று காலையில் மீண்டும் பேச்சுவார்த்தைக்கு அழைக்கப்பட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியிடம் திமுக அதே ஆறு தொகுதிகள் குறித்து வலியுறுத்த, 10 தொகுதிகளுக்குக் குறையாமல் வேண்டும் எனப் பேசிவிட்டு வருவதாகச் சொல்லித் திரும்பச் சென்றது.

மதிமுக உயர் நிலைக்கூட்டம் நடத்தி ஆலோசித்தது. அதில் தனிச் சின்னம் என்றால் 4 தொகுதி மட்டுமே, உதயசூரியன் சின்னம் என்றால் 6 தொகுதிகள், அதற்கு மேல் இல்லை. அனைவருக்கும் ஆறு, அதுதான் உறுதி என்று திமுக தரப்பு பேசியதன் அடிப்படையில் என்ன முடிவெடுக்கலாம் என ஆலோசிக்கப்பட்டதாகத் தெரிகிறது.

இறுதியில் 12 நாளைக்குள் தனிச் சின்னத்தை தொகுதி வாரியாகக் கொண்டுசென்று வெற்றி வாய்ப்பை இழப்பதைவிட உதயசூரியன் சின்னத்தில் நின்று 6 தொகுதிகளைப் பெறலாம் என்று முடிவெடுக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.

இதையடுத்து மதிமுக தரப்பு தகவல் திமுகவுக்கு அனுப்பப்பட, உடனடியாக ஒப்பந்தம் தயாரானது. மதிமுக பொதுச் செயலாளர் வைகோ அறிவாலயம் வர, திமுக தலைவர் ஸ்டாலினும் வர ஒப்பந்தம் கையெழுத்திட்டு நிறைவேறியது.

திமுக கூட்டணியில் 6 தொகுதிகளிலும் உதயசூரியன் சின்னத்திலேயே மதிமுக போட்டியிடுவது உறுதியாகியுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x