Published : 06 Mar 2021 06:03 PM
Last Updated : 06 Mar 2021 06:03 PM

திமுக கூட்டணி பிரச்சினையில் குறுக்குசால் ஓட்டுகிறதா மக்கள் நீதி மய்யம்?- காங்கிரஸுக்கு அழைப்பு; விசிக மீது கரிசனம்

சென்னை

திமுக, அதிமுக மோதலே எப்போதும் உள்ள நிலையில், தற்போது திமுக கூட்டணியில் தொகுதிப் பங்கீட்டில் ஏற்பட்டுள்ள இழுபறியைப் பயன்படுத்தி மக்கள் நீதி மய்யம் ஆதாயம் அடைய முயல்கிறதா? என்கிற கேள்வி எழுந்துள்ளது. அதிமுக கூட்டணியிலும் பிரச்சினை இருக்கிறது, ஆனாலும் திமுகவை மட்டுமே மக்கள் நீதி மய்யம் விமர்சிப்பதன் காரணம் குறித்த கேள்வி எழுந்துள்ளது.

திமுக கூட்டணி, அதிமுக கூட்டணிக் கட்சிகளுக்குள் தொகுதி உடன்பாடு காணுவதில் இழுபறி நீடித்து வருகிறது. இந்த நேரத்தில் கூட்டணிக் கட்சிகள், திமுக மீதும், அதிமுக மீதும் கடும் அதிருப்தியில் உள்ளன. கேட்ட தொகுதி கிடைக்கவில்லை என காங்கிரஸ், இடதுசாரிகள், மதிமுக என அனைத்துக் கட்சிகளுக்கும் அதிருப்தி. அதேபோன்று அதிமுக கூட்டணியில் பாஜக, தேமுதிக, தமாகா போன்ற கட்சிகளும் அதிருப்தியில் உள்ளன.

இந்த விவகாரத்தில், அதிமுக கூட்டணியில் உள்ள கட்சிகளின் அதிருப்தி குறித்து மக்கள் நீதி மய்யம் இதுவரை பேசவில்லை. ஆனால், திமுக கூட்டணியில் ஏற்படும் பிரச்சினைகளை மக்கள் நீதி மய்யத் தலைவர் கமல் உள்ளிட்ட நிர்வாகிகள் பேசுகின்றனர். திமுக கூட்டணியில் திருமாவளவனுக்கு 6 தொகுதிகள் ஒதுக்கப்பட்டதை இதுதான் சமூக நீதியா, என் தம்பி திருமாவளவனை எங்கே கொண்டுபோய் வைத்துள்ளீர்கள், 6 தொகுதி கொடுப்பதுதான் சமூக நீதியா? தம்பி திருமாவுக்கு முதலில் கொடுத்தது 21. பின்னர் 10, அப்புறம் 6. அப்புறம் எங்கே கொண்டு வைப்பீர்கள் என் தம்பியை. இனி தம்பி திருமா எங்கே போவார், அவர் வரவேண்டிய இடம் எங்களிடம்தான் என்று கமல் பேசினார்.

திமுக கூட்டணியில் உள்ள விசிகவினரை உசுப்பேற்றுகிறார் கமல் என்று விமர்சனங்கள் எழுந்தன. அதற்கு பதிலளித்த திருமாவளவன், கிராமத்து பொட்டல் காட்டில் பல ஏக்கர் வாங்குவது மதிப்பல்ல, நகரத்தில் சில சென்ட் நிலம் வாங்கினாலும் மதிப்புதான் எனத் தெரிவித்தார். வெற்றி பெறும் அணி இது. 6 தொகுதிகளிலும் வெற்றி பெறுவோம் என்றும் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

திமுக கூட்டணியில் காங்கிரஸுக்கும், திமுகவுக்கும் உள்ள பிரச்சினை வெடித்து வெளியே வந்துள்ளது. மிகக் குறைவான தொகுதிகளை காங்கிரஸுக்கு ஒதுக்குவதால் அவர்கள் செயற்குழுக் கூட்டத்தில் மாநிலத் தலைவரே கண்கலங்கி இருக்கும் சூழ்நிலை உருவாகியுள்ளது.

இதைக் குறிப்பிட்டுப் பேசியுள்ள மக்கள் நீதி மய்யப் பொதுச் செயலாளர் சி.கே.குமரவேல், "காங்கிரஸ் எங்களுடன் வர வேண்டும் என்பதில் விருப்பம் இருக்கிறது. ஏனென்றால், எங்கள் இரு கட்சிக்கும் ஒரே டிஎன்ஏ. தமிழகத்தில் மிகப்பெரிய மாறுதலை அவர்கள் வந்தால் உருவாக்கலாம். வரவில்லையென்றாலும் நாங்கள் மாறுதல் கொண்டு வருவோம். வந்தால் காங்கிரஸுக்கு நல்லது.

அப்படியில்லையென்றாலும் மக்கள் மாறுதலுக்காக எங்களுக்கு ஆதரவளிக்கத் தயாராகிவிட்டார்கள். பேச்சுவார்த்தை வெவ்வேறு மட்டங்களில் நடந்து கொண்டிருக்கிறது. நான் அதை வெளியிட முடியாது" என்று பகிரங்க அழைப்பு விடுத்துள்ளார்.

இதனிடையே மய்யத்தின் தலைவர் கமல், “காங்கிரஸ் இல்லாத இந்தியா என்பது பாஜகவின் திட்டம். அப்படி அவர்கள் திட்டமிட்டிருக்கும்போது, காங்கிரஸ் கட்சிக்கு எம்எல்ஏ, எம்.பி. பதவிகள் கிடைக்காத அளவுக்கு, அவர்களுடைய இருப்பை இல்லாமல் செய்துகொண்டிருக்கும் இவர்கள்தான் (திமுக) பாஜகவின் 'பி' டீம். இது இந்நேரம் காங்கிரஸுக்குப் புரிந்திருக்க வேண்டும். புரியவில்லையென்றால் அனுதாபம் மட்டும்தான் சொல்ல முடியும்" என்று பேசியுள்ளார்.

இதுவும் திமுக கூட்டணியை அசைத்துப் பார்க்கும் செயல். கூட்டணிக்குள் உள்ள தொகுதிப் பங்கீட்டு இழுபறியைப் பயன்படுத்தி குறுக்குசால் ஓட்டுகிறார் கமல் என திமுக தரப்பில் குற்றம் சாட்டப்படுகிறது. இவ்வளவு வருத்தப்படும் கமல் ஏன் அதிமுக கூட்டணியில் உள்ள பிரச்சினைகளைப் பேச மறுக்கிறார், அங்கும் தம்பி விஜயகாந்த் இருக்கிறாரே, ஏன் அழைக்கவில்லை என்ற கேள்வியையும் திமுக தரப்பில் முன் வைக்கின்றனர்.

காங்கிரஸ் கட்சி, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மீது கரிசனம் காட்டும் கமல் அதே அளவுக்கு இழுபறியில் உள்ள இடதுசாரிகள், மதிமுக பற்றி பேச வாய்த்திறக்காமல் இருப்பது ஏன்? என்கிற கேள்வியும் எழுந்துள்ளது. தான் மூன்றாவது அணி அமைக்க வேண்டும் என்கிற கவன ஈர்ப்புக்காக காங்கிரஸ், விசிகவை பற்றி பேசுகிறாரோ என்பது அரசியல் ஆர்வலர்கள் கேள்வியாக உள்ளது.

திமுகவிற்குள் உள்ள பிரச்சினையைப் பேசித் தீர்த்துக் கொள்வோம். எங்களுக்கு மூன்றாவது அணி மீது நம்பிக்கை இல்லை என காங்கிரஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தேர்தல் பிரச்சாரம் ஆரம்பிக்கும் முன் பல காட்சிகள் அரங்கேறும் நிலையைத் தமிழக அரசியல் பார்க்கிறது. தற்போதுள்ள சூழலைப் பயன்படுத்தி மக்கள் நீதி மய்யத்தை வலுவான அரசியல் இயக்கமாக மாற்ற கமல் முயற்சி எடுத்து வருவது இதுபோன்ற பேச்சுகள் மூலம் தெளிவாகியுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x