

திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 5 பேரவை தொகுதி தேர்தல் அலுவலர்களுக்கான பயிற்சி இன்று நடைபெற்றது.
திருநெல்வேலி மாவட்டத்தில் திருநெல்வேலி, பாளையங்கோட்டை, அம்பாசமுத்திரம், நாங்குநேரி, ராதாபுரம் ஆகிய 5 சட்டப் பேரவை தொகுதிகளிலும் பணியாற்றும் 157 மண்டல தேர்தல் அலுவலர்கள் தலைமையிலான குழுவினருக்கு, வாக்கப்பதிவு மற்றும் வாக்கு எண்ணும் மையத்தில் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்த தேர்தல் பயிற்சி முகாம் ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது.
மாவட்ட தேர்தல் அலுவலரும் ஆட்சியருமான வே. விஷ்ணு தலைமை வகித்தார். மாவட்ட வருவாய் அலுவலர் ஆ.பெருமாள் முன்னிலை வகித்தார். ஆட்சியரின் நேர்முக உதவியாளர்கள் எம். கணேஷ்குமார், என். சாந்தி மற்றும் அலுவலர்கள் பங்கேற்றனர்.
இதுவரை 7 வழக்குகள்:
திருநெல்வேலி மாவட்டத்தில் சட்டப் பேரவை தேர்தலையொட்டி ரோந்து பணிக்காக 15 பறக்கும்படை, 15 நிலையான கண்காணிப்பு குவுக்கள், 5 விடியோ கண்காணிப்பு குழுக்கள், 5 செலவின கண்காணிப்பு குழுக்கள் அமைக்கப்பட்டு 24 மணிநேரமும் தேர்தல் கண்காணிப்பு பணிகளில் ஈடுபடுத்தப்படுகிறார்கள்.
இந்த பறக்கும் படையினர் மூலம் இதுவரை உரிய ஆவணங்கள் இல்லாமல் எடுத்து சென்ற 29 மதுபாட்டில்கள், 64 வேட்டிகள், ரூ.1.25 லட்சம் ரொக்கம், 7.72 கிலோ வெள்ளி நகைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. 1950 என்ற சேவை எண்ணில் இதுவரை 199 தகவல்கள் பெறப்பட்டிருக்கின்றன.தேர்தல் விதிமீறல்கள் தொடர்பாக 7 வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன. மேலும், 2495 சுவர் விளம்பரங்கள், 5210 சுவரொட்டிகள், 615 பதாகைகள், மற்றவை 829 என்று மொத்தம் 9149 விளம்பரங்கள் இதுவரை அகற்றப்பட்டுள்ளன.
கொடி அணிவகுப்பு:
திருநெல்வேலி மாவட்டத்தில் தேர்தலை அமைதியாக நடத்துவதற்காக துணை ராணுவப் படையினரும், உள்ளூர் போலீஸாரும் இணைந்து பல்வேறு இடங்களில் கொடி அணிவகுப்பை நடத்தி வருகின்றனர். திருநெல்வேலி சந்திப்பில் நேற்று இந்த அணிவகுப்பு நடத்தப்பட்டது. இதுபோல் களக்காடு பகுதியிலும் எல்லை பாதுகாப்பு படையினர் மற்றும் உள்ளூர் போலீஸார் இணைந்து கொடி அணிவகுப்பை நடத்தினர்.