நெடுஞ்சாலைத் துறை பணி நியமன முறைகேட்டை எதிர்த்து வழக்கு: அறிக்கை தாக்கல் செய்ய உயர் நீதிமன்றம் உத்தரவு

நெடுஞ்சாலைத் துறை பணி நியமன முறைகேட்டை எதிர்த்து வழக்கு: அறிக்கை தாக்கல் செய்ய உயர் நீதிமன்றம் உத்தரவு
Updated on
1 min read

நெடுஞ்சாலைத் துறை மண்டலக் கணக்காளர்கள் பணி நியமனத்தில் நடந்த முறைகேடு குறித்து தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து விரிவான அறிக்கை தாக்கல் செய்ய உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நெடுஞ்சாலைத் துறை மண்டலக் கணக்காளர்கள் பணி நியமனத்தில் 2016-ம் ஆண்டு முதல் நடைபெற்ற முறைகேடுகள் குறித்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடக் கோரி வழக்கறிஞர் எம்.எல்.ரவி பொதுநல வழக்குத் தொடர்ந்திருந்தார்.

அந்தத் தேர்வில் தேர்வான 10 பேரின் தேர்வை ரத்து செய்ய அரசு செயலாளர் பரிந்துரை செய்திருந்ததாகவும், ஆனால் நெடுஞ்சாலைத் துறை இயக்குனர் 8 பேரின் தேர்ச்சியை மட்டுமே ரத்து செய்துள்ளதாகக் குற்றம் சாட்டியிருந்தார்.

டிஎன்பிஎஸ்சி முறைகேடு போல, விடைத்தாள் மாற்றம் செய்து முறைகேடு மூலம் தேர்வு முடிவுகளை நெடுஞ்சாலைத் துறை வெளியிட்டுள்ளதாகவும், ஏற்கெனவே மண்டலக் கணக்காளர் மீது நான்கரை லட்ச ரூபாய் அளவிற்கு லஞ்ச ஒழிப்பு வழக்கை சிபிஐ பதிவு செய்துள்ளதாகவும் குறிப்பிட்டிருந்தார்.

இந்தத் தேர்வு குறித்து முழுமையாக விசாரணை நடத்த சிபிஐக்கு உத்தரவிட வேண்டும் எனவும் கோரிக்கை வைத்திருந்தார். இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி மற்றும் நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, தமிழக அரசுத் தரப்பில், குற்றச்சாட்டுக்கு ஆளான பத்து விண்ணப்பதாரர்களின் தேர்ச்சி சான்றிதழ் ரத்து செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து, இந்த முறைகேடு புகார் மீது எடுத்த நடவடிக்கை குறித்த அறிக்கையை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை 6 வாரங்களுக்குத் தள்ளிவைத்தனர்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in