

உயிரிழப்புச் சம்பவங்கள் அதிகரிப்பதைத் தொடர்ந்து நீர்நிலைகளை வேடிக்கை பார்க்கவோ அல்லது குளிக்கவோ செல்ல வேண்டாம் என காஞ்சிபுரம் ஆட்சியர் கஜலெட்சுமி பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
காஞ்சிபுரம் மாவட்டத்தில், வடகிழக்கு பருவமழை தீவிரத்தால் ஏரி மற்றும் ஆறுகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் 18 ஆண்டுகளுக்குப் பிறகு பாலாறு, வேகவதி ஆறுகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து செல்கிறது.
இதை வேடிக்கை பார்ப்பதற்கும் நீரில் இறங்கி மீன்பிடிப்பது, நீராடுவது போன்றவைகளுக்காக ஏராளமானோர் நீர்நிலைகளுக்குச் செல்கின்றனர். இதனால் எதிர்பாராத விபத்துகளில் சிக்கி பலர் நீரில் முழ்கி உயிரிழக்கும் சம்பவம் அதிகரித்து வருகிறது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் மட்டும் இதுபோன்ற காரணங்களால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 35-ஐ தொட்டுள்ளது.
5 பேர் பலி
இதனிடையே, மாவட்டத்தின் வெவ்வேறு இடங்களில் இன்று ஒரே நாளில் 5 பேர் உயிரிழந்தனர். ஓட்டேரி விரிவு பகுதியைச் சேர்ந்த ராஜசேகரன்(19). ஆதனூர் அருகே உள்ள ஏரியில் வேடிக்கை பார்க்கச் சென்றபோது தவறி ஏரியில் விழுந்ததில் நீரில் முழ்கி பலியானார்.
பாலாற்றில் நண்பர்களுடன் குளித்துக்கொண்டிருந்த போது, நீரில் அடித்து செல்லப்பட்ட சம்பவத்தில் திம்மராஜம்பேட்டையைச் சேர்ந்த ஏகன் என்பவரின் மகன் சரத்குமார்(13) மற்றும் செங்கல்பட்டு அடுத்த திம்மாவரம் பாலு நகரைச் சேர்ந்த ஆனந்தன் என்பவரின் மகன் விஜய் (13) ஆகியோர் உயிரிழந்தனர். சோத்துகாலனியைச் சேர்ந்த ரவி (46) உத்திரமேரூர் ஏரியிலிருந்து செல்லும் கால்வாயில் தவறி விழுந்து, நீரில் முழ்கி இறந்தார். இதுதொடர்பாக, போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
கூடுவாஞ்சேரி அடுத்த காயரம்பேடு கிராமத்தை சேர்ந்தவர் வேணுகோபால்(33). வீட்டில் சாப்பிட்டுக்கொண்டிருந்தபோது வீட்டின் மண்சுவர் திடீரென இடிந்து விழுந்தது. இதில், இடிபாடுகளில் சிக்கிய அவர் அதே இடத்திலேயே இறந்தார். இதுதொடர்பாக, கூடுவாஞ்சேரி போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
ஆட்சியர் வேண்டுகோள்
இதனிடையே, பாதுகாப்பு கருதி நீர் நிலைகளை வேடிக்கை பார்க்க பொதுமக்கள் யாரும் செல்ல வேண்டாம் என, மாவட்ட ஆட்சியர் கஜலட்சுமி வேண்டுகோள் விடுத்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது:
நீர் நிலைகளை வேடிக்கை பார்க்கச் செல்லும் சிறுவர்கள், ஆர்வம் மற்றும் மகிழ்ச்சி காரணமாக ஆபத்தை உணராமல் அதில் இறங்குகின்றனர். இதனால், நீரில் மூழ்கி உயிரிழக்கும் சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன. சில இடங்களில் பெரியவர்களும் இதுமாதிரி பலியாகியுள்ளதால், பொதுமக்கள் பாதுகாப்பற்ற நீர் நிலைகளை வேடிக்கை பார்க்கவும், குளிக்கவும் வேண்டாம் என கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.