உதயநிதியிடம் நேர்காணல் நடத்திய ஸ்டாலின்

உதயநிதியிடம் நேர்காணல் நடத்திய ஸ்டாலின்.
உதயநிதியிடம் நேர்காணல் நடத்திய ஸ்டாலின்.
Updated on
1 min read

சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட விருப்ப மனு தாக்கல் செய்த உதயநிதியிடம் திமுக தலைவர் ஸ்டாலின் நேர்காணல் நடத்தினார்.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் திமுக சார்பில் போட்டியிட விரும்புவோருக்கான விருப்ப மனு விநியோகம், கடந்த பிப்ரவரி 17-ம் தேதி சென்னை அண்ணா அறிவாலயத்தில் தொடங்கியது. அதனையடுத்து பிப்ரவரி 28-ம் தேதி விருப்ப மனு தாக்கல் நிறைவடைந்தது.

விருப்ப மனு தாக்கல் செய்தவர்களுக்கான நேர்காணல் சென்னை அண்ணா அறிவாலயத்தில் மார்ச் 2-ம் தேதி முதல் மார்ச் 6-ம் தேதி வரை மாவட்ட வாரியாக நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் இன்றுடன் (மார்ச் 6.) நேர்காணல் முடிவடைகிறது. கடைசி நாளான இன்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பங்கேற்றார். கொளத்தூர் தொகுதியில் போட்டியிட விருப்ப மனு தாக்கல் செய்த ஸ்டாலினிடம், துரைமுருகன் நேர்காணல் நடத்தினார்.

ஏற்கெனவே, 1984 முதல் 2006 வரை நடைபெற்ற சட்டப்பேரவைப் பொதுத் தேர்தல்களில் ஆயிரம் விளக்கு தொகுதியில் மு.க.ஸ்டாலின் போட்டியிட்டார். இதில், 1984 மற்றும் 1991 ஆகிய தேர்தல்களில் ஸ்டாலின் தோல்வியைத் தழுவினார். இதன் பின்னர், 2011, 2016 ஆகிய சட்டப்பேரவைத் தேர்தல்களில் கொளத்தூர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இந்நிலையில், மூன்றாவது முறையாக இந்தத் தேர்தலிலும் கொளத்தூர் தொகுதியில் ஸ்டாலின் போட்டியிட உள்ளார். திமுக தலைவரே நேரடியாகப் போட்டியிடும் தொகுதி என்பதால், பிரதான கட்சியான அதிமுகவில் யார் களமிறக்கப்படுவார் எனும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

அதேபோன்று, சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதியில் போட்டியிட திமுக இளைஞரணிச் செயலாளர் உதயநிதி விருப்ப மனு அளித்தார். சேப்பாக்கம், திருவல்லிக்கேணி இரண்டு தொகுதிகளாக கடந்த 2006 சட்டப்பேரவைத் தேர்தலில் களம் கண்டது. 2011 தேர்தலில் ஒரு தொகுதியாய் மாறிப் போனது. அத்தொகுதியில் 2011, 2016 தேர்தல்களில் திமுக சார்பில் மறைந்த ஜெ.அன்பழகன் வெற்றி பெற்றார். கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு ஜெ.அன்பழகன் மறைந்த நிலையில், உதயநிதி அத்தொகுதியில் போட்டியிட விருப்ப மனு அளித்தார்.

அவரிடம், நேரடியாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நேர்காணல் நடத்தினார். அப்போது பொதுச் செயலாளர் துரைமுருகன், பொருளாளர் டி.ஆர்.பாலு, துணைப் பொதுச் செயலாளர் பொன்முடி உள்ளிட்டோர் இருந்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in