Published : 06 Mar 2021 07:41 AM
Last Updated : 06 Mar 2021 07:41 AM

அதிமுக கூட்டணியில் பாஜகவுக்கு 20; பாமகவுக்கு 23: தேமுதிக, தமாகாவுக்கு எத்தனை சீட்?- இன்று முடிவு

அதிமுக கூட்டணியில் பாஜகவுக்கு 20 தொகுதிகள் ஒதுக்கப்பட்ட நிலையில், 8 நாட்களாக நீடித்துவந்த இழுபறி முடிவுக்கு வந்துள்ளது.

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக, பாஜக, பாமக, தேமுதிக, தமாகா ஆகிய கட்சிகள் ஓரணியிலும், திமுக, விசிக, மதிமுக, இடதுசாரிகள், இந்திய யூனியன் முஸ்லீம் லீக், மனித நேய மக்கள் கட்சி, கொமதேக ஆகிய கட்சிகள் இன்னொரு அணியிலும் தேர்தலை எதிர்கொள்கின்றன.

தமிழகத்தில் அதிகாரபூர்வமாக மூன்றாவது அணி அமையாவிட்டாலும் மக்கள் நீதி மய்யம், சமத்துவ மக்கள் கட்சி, இந்திய ஜனநாயகக் கட்சி ஆகியன ஓரணியில் உள்ளன.

இத்தகைய சூழலில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட அதிமுக பாஜக தொகுதி உடன்பாடு எட்டப்பட்டுள்ளது. நேற்றிரவு 11.43 மணியளவில் அதிமுக பாஜக தொகுதி உடன்பாடு அறிவிக்கப்பட்டது. பாஜகவுக்கு 20 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. மேலும், கன்னியாகுமரி மக்களவை தொகுதியும் பாஜகவுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கூட்டாக இந்த அறிவிப்பை வெளியிட்டனர். பாஜக சார்பில் மாநிலத் தலைவர் எல்.முருகன், தமிழக பொறுப்பாளர் சி.டி.ரவி ஆகியோர் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.

விரும்பும் தொகுதிகளைப் பெறுமா பாஜக?

விருதுநகர், ராஜபாளையம், மதுரை கிழக்கு, மதுரை வடக்கு, சேலம் ஆத்தூர், நாமக்கல், ராசிபுரம், ஈரோடு, பவானி, திருப்பூர், கோவை, கோவை ( தெற்கு), சூலூர், கரூர், அரவங்குறிச்சி, சேப்பாக்கம், மயிலாப்பூர், துறைமுகம், கொளத்தூர், திருவள்ளூர் (அ) திருத்தணி, செங்கல்பட்டு, ஆலந்துர், காஞ்சிபுரம், ஸ்ரீபெரும்பதூர் (தனி) வேலூர், கேவி குப்பம், கிருஷ்ணகிரி, ஓசூர், தருமபுரி போன்ற தொகுதிகளை பாஜக விரும்புவதாகவும் இதில் 20 தொகுதிகளை இறுதி செய்ய அடுத்தக்கட்ட முயற்சியில் இறங்கியுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

தமாகாவுக்கு 3 தொகுதிகள்?

இதற்கிடையில், தமிழ் மாநில காங்கிரஸ் கட்சிக்கு 3 தொகுதிகள் ஒதுக்க முன்வந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஈரோடு, வால்பாறை, பட்டுக்கோட்டை ஆகிய மூன்று தொகுதிகளை தமாகாவுக்கு ஒதுக்க அதிமுக முன்வந்துள்ளதாகத் தெரிகிறது. ஆனால், தமாகா 8 தொகுதிகள் கேட்டு பிடிவாதம் செய்துவருவதாகத் தெரிகிறது.

தேமுதிக இழுபறி முடியுமா?

பாமகவுக்கு இணையாக அதே 23 சீட் இல்லாவிட்டால் 20 சீட் என்பதில் சற்றும் இறங்காமல் பிடிவாதம் செய்யும் தேமுதிகவுடன் இன்று மீண்டும் அதிமுக பேச்சுவார்த்தை நடத்துகிறது. தேமுதிகவுக்கு அதிகபட்சம் 15 தொகுதிகள் வரை ஒதுக்க அதிமுக தயாராக இருப்பதாகத் தெரிகிறது. ஒருவேளை அதிலும் இழுபறி நீடித்தால் இறுதியாக, 18லிருந்து 20 தொகுதிகளுக்குள் தொகுதிகள், ஒரு ராஜ்யசபா சீட் என்ற கணக்கில் உடன்பாடு எட்டப்படலாம் என்று தெரிகிறது.

தேமுதிக சார்பில் நேற்று பிரேமலதா விஜயகாந்த், விஜயகாந்தின் மகன் விஜய பிரபாகர் ஆகியோர் விருப்பமனு அளித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

முதற்கட்ட வேட்பாளர்களை அறிவித்த அதிமுக:

தொகுதிப் பங்கீடு சிக்கல்கள் இன்னும் முடிவுக்கு வராவிட்டாலும் அதிமுக அடுத்தகட்டத்துக்குச் சென்று நேற்று முதற்கட்ட வேட்பாளர்கள் பட்டியலை அறிவித்தது. இதில் முதல்வர் பழனிசாமி எடப்பாடி தொகுதியிலும், துணை முதல்வர் போடி நாயக்கனூரிலும், ஜெயக்குமார் ராயபுரம் தொகுதியிலும், விழுப்புரம் தொகுதியில் சி.வி.சண்முகம், நிலக்கோட்டையில் தேன்மொழி, ஸ்ரீவைகுண்டத்தில் சண்முகநாதன் என சிட்டிங் எம்.எல்.ஏ.,க்களுக்கு அதே தொகுதிகளை ஒதுக்கியது அதிமுக.

அடுத்தடுத்த பட்டியலில் புதியவர்களுக்கும் வாய்ப்பிருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இன்று தேமுதிக, தமாகா தொகுதி பங்கீடுப் பிரச்சினையும் முடிவுக்கு வந்தால், அதிமுக முழு வீச்சில் பிரச்சாரத்தில் இறங்கும்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x