

திருப்பூர் மாவட்டம் அவிநாசியில், கொங்கு ஏழு சிவஸ்தலங்களில் முதன்மையானதாகக் கருதப்படும் கருணம்பிகையம்மன் உடனமர் அவிநாசிலிங்கேஸ்வர் கோயில் உள்ளது.
இங்கு ஆண்டுதோறும் மாசி,பங்குனி மாதங்களில், அவிநாசிலிங்கேஸ்வரர் மீது சூரிய ஒளி விழுவதுவழக்கம். சூரிய பகவான் தட்சிணாயன காலத்தில் இருந்து உத்தராயண காலத்துக்கு மாறும்போது, அவிநாசிலிங்கேஸ்வரரை வணங்கிச் செல்வார் என்பது ஐதீகம்.
இதன்படி நேற்று சூரிய உதயத்தின்போது, பழமையான இக்கோயிலின் ராஜகோபுரம் வழியாக சூரிய ஒளி ஊடுருவி, அவிநாசிலிங்கேஸ்வரர் மீது விழுந்தது. அப்போது, பொன் நிறத்தில் அவிநாசிலிங்கேஸ்வரர் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
காலை 6.45 மணிக்குத் தொடங்கி 5 நிமிடங்களுக்கு மேல் சூரிய கதிர்கள் சிவலிங்கத்தின் மீது நிலையாக விழுந்து, பின்னர் படிப்படியாக மறைந்தது.
3 நாட்கள் தரிசிக்கலாம்
இந்த அபூர்வ நிகழ்வை ஏராள மான பக்தர்கள் தரிசித்தனர். இந்நிகழ்வு தொடர்ச்சியாக 3 நாட்களுக்கு காலை நேரங்களில் நடைபெறும் என எதிர்பார்ப்பதாக கோயில் நிர்வாகிகள் தெரிவித்தனர்.