Published : 06 Mar 2021 03:13 AM
Last Updated : 06 Mar 2021 03:13 AM

வாக்காளர்களுக்கு செயலிகள் மூலம் பணம் விநியோகமா? - ஆன்லைன் பணப் பரிமாற்றத்தை எளிதில் கண்டறியலாம்: தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை

வாக்காளர்களுக்கு கூகுள் பே போன்ற செயலிகள் மூலம் பணம் விநியோகம் செய்யப்படும் பட்சத்தில் ஆன்லைன் பணப் பரிமாற்றத்தை எளிதில் கண்டறிந்து விடலாம் என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தெரிவித்தார்.

தமிழகத்தில் சட்டப்பேரவை பொதுத்தேர்தல் வாக்குப்பதிவு ஏப்.6-ம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான அறிவிப்பு கடந்த பிப்.26-ம் தேதி வெளியானது. அன்று முதல் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளன. இந்நிலையில், தேர்தல் முன்னேற்பாடுகள் குறித்து தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது:

சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு பறக்கும் படை மற்றும் நிலைகண்காணிப்பு குழுவினர் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். நேற்றுமுன்தினம் வரை மாநிலம் முழுவதும் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.14 கோடியே 13 லட்சம் ரொக்கம், ரூ.38 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

தேர்தல் சிறப்பு பார்வையாளர்களாக நியமிக்கப்பட்டுள்ள மதுமகாஜன் மற்றும் பாலகிருஷ்ணன் ஆகியோர் விரைவில் சென்னைக்கு வர உள்ளனர்.

வாக்காளர் தகவல் சீட்டு

வாக்காளர் தகவல் சீட்டில் வாக்காளர் பற்றிய விவரங்கள், இருப்பிட விவரம், வாக்களிக்கும் மையம் உள்ளிட்டவை இடம்பெற்றிருக்கும். இந்த வாக்காளர் தகவல் சீட்டை வாக்களிப்பதற்கான ஆவணமாகப் பயன்படுத்தக் கூடாது. வாக்களிக்க ஆணையம் அங்கீகரித்துள்ள வாக்காளர் அடையாள அட்டை உள்ளிட்ட ஆவணங்களைக் கொண்டுவர வேண்டும்.

‘கூகுள் பே’ செயலி மூலம் பணப்பட்டுவாடா என்பது வங்கி வழியாகவே நடைபெறுவதால் அதை எளிதாக அறிந்து கொள்ள முடியும்.பொதுவாக மின்னணு சாதனங்களில் பணப்பரிமாற்றம் என்பதை நாம் ரகசியமானது என்று கருதலாம். ஆனால், அனைத்து தகவல்களும் பதிவாகிவிடும். இதுபோன்ற பணப்பரிமாற்ற நிகழ்வுகள் குறித்துஅறிந்தால் அவற்றை புகாராக அளிக்கலாம். புலனாய்வு அதிகாரிகளுடன் தேர்தல் துறை ஒருங்கிணைந்து செயல்படுவதால் எளிதாக கண்டறியலாம்.

தமிழகத்தைப் பொறுத்தவரை செலவின விஷயத்தில் கவனம் கொள்ளப்படும் மாநிலமாக உள்ளது. இதுகுறித்து சிறப்பு பார்வையாளர்களுக்கு தகவல்கள் அளிக்கப்படும். அவர்கள் சிறப்பு புலனாய்வு பிரிவு மூலம் கண்காணிப்பார்கள். வாக்காளர்களுக்கு பணம் வழங்குவது கண்டுபிடிக்கப்பட்டால் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.

டோக்கன் குறித்த புகார்

சென்னையில் சில இடங்களில் வாக்காளர்களுக்கு டோக்கன் வழங்கப்படுவதாக கூறப்படுவது குறித்து புகார் எதுவும் வரவில்லை. பொதுமக்கள் இதுதொடர்பாக ‘சி-விஜில்’ என்ற கைபேசி செயலி மூலம் புகைப்படத்துடன் புகார் அளிக்கலாம். சட்டம் ஒழுங்கு தொடர்பான பதற்றமான பகுதிகள் தவிர, தேர்தல் செலவின கவனம் (எக்ஸ்பெண்டிச்சர் சென்சிடிவ்) பகுதிகளும் கண்டறியப்படும்.

வேட்பாளர்கள் பட்டியல் இறுதி செய்யப்பட்ட பின், மாவட்ட தேர்தல் அதிகாரி, காவல்துறை கண்காணிப்பாளர், செலவின பார்வையாளர்கள் இணைந்து அப்போதைய காலகட்டத்தில் நிலவும் சூழல் அடிப்படையில் அவற்றை அடையாளம் கண்டு, தேவையான பாதுகாப்பு, கண்காணிப்பு நடவடிக்கைகளை எடுப்பார்கள்.

இவ்வாறு சத்யபிரத சாஹூ தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x