

நாங்கள் யாரையும் வீழ்த்த வரவில்லை, வெல்லவே வந்திருக்கிறோம் என்று மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில், வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் மக்கள் நீதிமய்யம் கட்சி, கூட்டணி அமைத்து தேர்தலை சந்திக்கவுள்ளது.இதற்கிடையே, மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் தமிழகம்முழுவதும் பல்வேறு கட்டமாக தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். கடந்த சில நாட்களாக சென்னையில் அவர் பிரச்சாரம் மேற்கொண்டுள்ளார்.
அதன்படி, சென்னை திருவல்லிக்கேணி நெடுஞ்சாலையில் நேற்று மாலையில் அவர் திறந்த வேனில் நின்றபடி வாக்கு சேகரித்து, அக்கட்சியின் சின்னமான டார்ச் லைட்டை கையில் உயர்த்திக் காட்டி பிரச்சாரம் செய்தார். அவர் பேசியதாவது:
இந்தப் பகுதி எனக்கு புதிது அல்ல. சிறுவனாக இருந்தபோது, இந்தச் சாலையை கடந்துதான் பள்ளிக்குச் சென்றேன். பள்ளியில் கற்றதைக் காட்டிலும், இந்த வீதியில்தான் அதிகம் கற்றுக் கொண்டேன்.
தமிழக அரசியல் மிகவும் சீர்கெட்டு இருப்பதால்தான், நான்அரசியலுக்கு வந்துள்ளேன். நீங்களும் அரசியலுக்கு வர வேண்டும்.இங்கு வந்துள்ள கூட்டம் தமிழகத்தை சீரமைக்க வேண்டும் என்றநோக்கத்தில் கூடியிருக்கிறது. தமிழகத்தில் 50 ஆண்டு கால அரசியலில் மாற்றத்தை ஏற்படுத்திய கூட்டமாக இது இருக்கும் என்பதை வருங்கால தலைமுறை சொல்லும்.
எம்மதமும் சம்மதம்
எம்மதமும் சம்மதம் என்ற எண்ணத்தில் வாழ்கிறேன். எந்தமதம், எந்த ஜாதி என நான் கேட்டதில்லை. நீங்கள் அனைவரும் எனதுசகோதரர்கள். அதுதான் எனக்கு தெரியும். இங்குள்ள தொண்டர்கள் வீடு வீடாகச் சென்று மக்களை சந்தித்து தமிழகத்தில் முன்னேற்றம் ஏற்பட, மாற்றத்துக்கான பிரச்சாரத்தை மேற்கொள்ள வேண்டும்.
தமிழகத்தில் அமையப்போவது மக்கள் நீதி மய்யம் ஆட்சி அல்ல, மக்களுக்கான ஆட்சி. நாங்கள் யாரையும் வீழ்த்த வரவில்லை, வெல்லவே வந்திருக்கிறோம்.
10 ஆண்டுகள் போதாது
இங்கிருந்து கோட்டைக்கு நடந்தே சென்றுவிடலாம். வாருங்கள் மக்களோடு இணைந்தே செல்வோம். உங்கள் தொகுதிகளில் இருக்கும் குறைகளைத்தெரிவித்து, குறிப்பிட்ட காலத்துக்குள் நிறைவேற்றாவிட்டால் நானே உங்களது குறைகளைத் தீர்ப்பேன். நாங்கள் அறிவித்துள்ள திட்டங்களை செயல்படுத்த 10 ஆண்டுகள் போதாது. முதலில் வரும் 5 ஆண்டுகளைக் கொடுங்கள். நேர்மைக்கு மதிப்பளித்து வாக்களியுங்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.
இதைத் தொடர்ந்து, நந்தனத்தில் நடைபெற்று வரும் புத்தகக்கண்காட்சிக்கு சென்று, பிரச்சாரம் செய்தார். திருவொற்றியூர் தேரடி வீதியிலும் திறந்தவேனில் சென்று பிரச்சாரம் மேற்கொண்டார். நிறைவாக கொளத்தூர் அகரம் சந்திப்பில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் அவர் பேசினார்.