Published : 06 Mar 2021 03:14 AM
Last Updated : 06 Mar 2021 03:14 AM

தொலைநோக்கு ஆவணம் குறித்து மக்களிடம் விளக்க வேண்டும்- தபால் வாக்குப்பதிவு குறித்து கண்காணிப்பது அவசியம்: திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தல்

சட்டப்பேரவைத் தேர்தலில் தபால்வாக்குப் பதிவு குறித்து மாவட்டச்செயலாளர்கள் கண்காணிக்க வேண்டும் என்று திமுக தலைவர்மு.க.ஸ்டாலின் அறிவுறுத்திஉள்ளார்.

மார்ச் 14-ம் தேதி திருச்சி சிறுகனூரில் திமுக மாநில மாநாடு நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டு ஏற்பாடுகள் நடைபெற்று வந்தன.இந்நிலையில், ஏப்.6-ம் தேதி சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறஇருப்பதால் மாநாட்டுக்குப் பதிலாகமார்ச் 7-ம் தேதி பொதுக்கூட்டம் நடத்த திமுக முடிவு செய்துள்ளது.

விடியலுக்கான முழக்கம்

காலை 7 முதல் இரவு 8 மணிவரை நடைபெறும் இந்தப் பொதுக்கூட்டத்துக்கு ‘விடியலுக்கான முழக்கம்' என்று பெயரிடப்பட்டுள்ளது.

திமுக ஆட்சிக்கு வந்தால் அடுத்த 10 ஆண்டுகளில் மேற்கொள்ள இருக்கும் திட்டங்கள் குறித்த தொலைநோக்கு ஆவணத்தை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிடுகிறார்.

இதுதொடர்பாக ஆலோசிப்பதற்காக திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் காணொலிக் காட்சி மூலம் நேற்று காலை 9 மணிக்கு நடைபெற்றது. திமுகபொதுச்செயலாளர் துரைமுருகன், பொருளாளர் டி.ஆர்.பாலு,முதன்மைச் செயலாளர் கே.என்.நேரு, துணை பொதுச்செயலாளர் கள் ஐ.பெரியசாமி, க.பொன்முடி, சுப்புலட்சுமி ஜெகதீசன், ஆ.ராசா, அந்தியூர் ப.செல்வராஜ், அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, மாநிலங்களவை உறுப்பினர்கள் பி.வில்சன், என்.ஆர்.இளங்கோ மற்றும் மாவட்டச் செயலாளர்கள், பொறுப்பாளர்கள் பங்கேற்றனர்.

நிர்வாகிகளுக்கு அழைப்பு

இக்கூட்டத்தில் பேசிய ஸ்டாலின், ‘‘திருச்சியில் நடைபெறும் கூட்டத்தில் திமுக மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூராட்சி, பகுதி, வட்ட நிர்வாகிகள் அனைவரும் பங்கேற்க வேண்டும்’’ என்று அழைப்பு விடுத்தார்.

மேலும், “வரும் பேரவைத் தேர்தலில் தேர்தல் ஆணையத்தால் வரையறுக்கப்பட்டுள்ள 80 வயதுமூத்த குடிமக்கள், மாற்றுத் திறனாளிகள், கரோனாவால் பாதிக்கப்பட்டோர், நோயுற்றவர்களாகச் சந்தேகிக்கப்படுபவர்கள் ஆகியோருக்கான தபால் வாக்குகள் பதிவுசெய்யும் நடைமுறைகளை மாவட்டச் செயலாளர்கள் உன்னிப்பாகக் கண்காணிக்க வேண்டும்.

எச்சரிக்கை தேவை

இதில் ஏதேனும் தவறுகள் நடைபெற்றால் அதைத் தடுப்பதற்கான நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ள வேண்டும். இந்த விவகாரத்தில் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்’’என்று அறிவுறுத்தினார்.

திருச்சி கூட்டத்தில் ஸ்டாலின் நாளை வெளியிடவுள்ள, தொலைநோக்கு ஆவணத்தை அடுத்த 10 நாட்களில் 2 கோடி மக்களிடம் கொண்டு செல்ல திமுக திட்டமிட்டுள்ளது.

சமூக ஊடகங்கள்

முகநூல், ட்விட்டர், இன்ஸ்டாகிராம், யூ-டியூப், வாட்ஸ்-அப்உள்ளிட்ட சமூக ஊடகங்கள் மூலம்தொலைநோக்கு ஆவணத்தை பரப்ப வேண்டும். வாக்குச்சாவடி கமிட்டிகள் மூலம் வீடுவீடாகச் சென்று துண்டுப் பிரசுரங்கள் வழங்குதல், தெருமுனைக் கூட்டங்கள், மக்கள் அதிகம் கூடும் இடங்களில் மின்னணு திரை மூலமும் தொலைநோக்கு ஆவணத்தை மக்களிடம் கொண்டு சேர்த்து திமுக மீது நம்பிக்கையை ஏற்படுத்த வேண்டும் என்று மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியதாக கூட்டத்தில் பங்கேற்ற திமுக மாவட்டச் செயலாளர் ஒருவர் ‘இந்து தமிழ்' நாளிதழிடம் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x