Published : 06 Mar 2021 03:14 AM
Last Updated : 06 Mar 2021 03:14 AM

அதிமுக ஒருங்கிணைப்பாளர்கள் ஓபிஎஸ், இபிஎஸ்ஸிடம் வரைவு தேர்தல் அறிக்கை தாக்கல்: விரைவில் வெளியிட கட்சி தலைமை திட்டம்

சென்னை

அதிமுகவின் வரைவு தேர்தல்அறிக்கையை ஒருங்கிணைப்பாளர்கள் ஓபிஎஸ், இபிஎஸ்ஸிடம் பொன்னையன் தலைமையிலான தேர்தல் அறிக்கை தயாரிப்புக் குழு சமர்ப்பித்துள்ளது. அதிமுக தேர்தல் அறிக்கை விரைவில் வெளியிடப்பட உள்ளது.

சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு, அதிமுகவில் தேர்தல் வாக்குறுதிக்கான அறிக்கையை தயார் செய்ய அமைப்பு செயலாளர் பொன்னையன் தலைமையில் 11 பேர் கொண்ட அறிக்கை தயாரிப்புக் குழுவை அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ், இணை ஒருங்கிணைப்பாளர் இபிஎஸ் ஆகியோர் அமைத்திருந்தனர்.

இந்த குழுவில் சட்டப்பேரவைதுணைத் தலைவர் பொள்ளாச்சிஜெயராமன், அமைச்சர்கள்கே.ஏ.செங்கோட்டையன், சி.விசண்முகம், ஓ.எஸ்.மணியன், அமைப்பு செயலாளர்கள் நத்தம் விஸ்வநாதன், செம்மலை, பிரபாகர், முன்னாள் அமைச்சர் கோகுலஇந்திரா, சிறுபான்மையினர் நலப்பிரிவு செயலாளர் அன்வர்ராஜா, மருத்துவ அணி செயலாளர் வேணுகோபால் உள்ளிட்டோர் இடம்பெற்றிருந்தனர்.

வாக்காளர்களைக் கவரும் வகையில் மருத்துவம், கல்வி, தொழில் வளம், பெண்கள் நலன்,நலத் திட்டங்கள் உள்ளிட்ட பிரிவுகளில் தேர்தல் அறிக்கை தயார் செய்யப்பட்டது.

இதற்கிடையில், 6 பேர் கொண்ட முதல் வேட்பாளர் பட்டியலை அதிமுக நேற்று வெளியிட்டது. இதைத் தொடர்ந்து, தேர்தல் அறிக்கையையும் விரைவில் வெளியிட அதிமுக தலைமை முடிவு செய்துள்ளது.

இந்நிலையில், அதிமுகவின்வரைவு தேர்தல் அறிக்கையைஇறுதி செய்து, ஒருங்கிணைப்பாளர்கள் ஓபிஎஸ், இபிஎஸ் ஆகியோரிடம் பொன்னையன் தலைமையிலான அறிக்கை தயாரிப்புக் குழு நேற்று மாலை சமர்ப்பித்தது.

மக்களை கவரும் திட்டங்கள்

இதில் பொதுமக்களை கவரும் வகையில் பல்வேறு இலவச நலத்திட்டங்கள் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அறிக்கையில் சில மாற்றங்கள் செய்யப்பட்டும், மேலும் சில புதிய அம்சங்களை இணைத்தும் விரிவான தேர்தல் அறிக்கையை விரைவில் வெளியிடுவதற்கு அதிமுக தலைமை திட்டமிட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x