

தேசிய அளவில் நதிகளை இணைக்க வலியுறுத்தி, கிருஷ்ண கிரியில் இருந்து காஷ்மீர் வரை 15 ஆயிரம் கி.மீ. தூரத்துக்கு இருசக்கர வாகனப் பயணத்தை முன்னாள் ராணுவ வீரர்கள் இருவர் மேற்கொண்டுள்ளனர்.
நதிகளை தேசியமயமாக்க வேண்டும். தேசிய அளவில் நதிகளை இணைக்க வேண்டும். தேசியநீர்வழிச் சாலை அமைக்க வேண்டும்என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி, இந்திய நதிகள் இணைப்பு இயக்கத்தைச் சேர்ந்த முன்னாள் ராணுவ வீரர்கள் வாக்கர் சர்தார், முனிராஜுலு ஆகியோர் அகில இந்திய இருசக்கர வாகனப் பயணம் மேற்கொண்டுள்ளனர்.
நேற்று கிருஷ்ணகிரி மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் இப்பயணத்தை மாவட்ட நீதிபதி அறிவொளி கொடிஅசைத்து தொடங்கி வைத்தார்.
கிருஷ்ணகிரியில் இப்பய ணத்தை தொடங்கிய முன்னாள் ராணுவ வீரர்கள் இருவரும், கேரள மாநிலம் சென்று மீண்டும் தமிழகத்துக்கு திரும்பி வந்து ஆந்திரா, மகாராஷ்டிரா வழியாக காஷ்மீர் வரை 15 ஆயிரம் கி.மீ தூரத்தை 150 நாட்களில் கடக்கவுள்ளனர்.
இதைத் தொடர்ந்து புதுடெல்லிக்கு சென்று, பிரதமர் மோடியை சந்தித்து நதிகளை தேசியமயமாக்க வேண்டும். தேசிய நதிகளை இணைக்க வேண்டும் என வலியுறுத்தி மனு அளிக்கவும் உள்ளனர். மேலும், நதிகள் இணைப்பு தொடர்பாக, செல்லும் வழியில் விழிப்புணர்வு நோட்டீஸ்களை வழங்கி அவர்கள் பொதுமக்களுக்கு விழிப்புணர்வும் ஏற்படுத்த உள்ளனர்.