

கோவை மாவட்டத்தில் தேர்தல் நடத்தை விதிமீறல்களைத் தடுக்கும் வகையில், 30 பறக்கும்படை குழுக்கள், 30 நிலையான கண்காணிப்புக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. துணை வட்டாட்சியர் அந்தஸ்தில் உள்ள அதிகாரி தலைமையில் இயங்கும் இக்குழுவில், காவல் உதவி ஆய்வாளர், 2 காவலர்கள், வீடியோ கேமராமேன், ஓட்டுநர் இடம் பெற்றுள்ளனர்.
மாவட்ட தேர்தல் கட்டுப்பாட்டு அறைக்கு வரும் புகார்களின் அடிப்படையிலும், முக்கிய இடங்களிலும் பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், பறக்கும் படையினர் முறையாக சோதனைப் பணியை மேற்கொள்வதைக் கண்காணிக்கவும், அவர்களது வாகனங்கள் செல்லக்கூடிய இடத்தைக் கண்காணிக்கவும், வாகனங்களில் ஜி.பி.எஸ். கருவி பொருத்தப்பட்டது.
சென்னையில் இருந்து வந்த குழுவினர், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பறக்கும் படையினரின் வாகனங்களுக்கு ஜி.பி.எஸ். கருவியைப் பொருத்தினர்.
இதுகுறித்து அதிகாரிகள் கூறும்போது, ‘‘முதல்கட்டமாக 27 வாகனங்களுக்கு ஜி.பி.எஸ். கருவி பொருத்தப்பட்டு, தேர்தல் கட்டுப்பாட்டு அறையில் உள்ள மெகா திரை மூலம் தொடர்ந்து கண்காணிக்கப்படும். அதேபோல, பணம், பரிசுப் பொருட்கள் விநியோகம் தொடர்பாக தகவல் வந்தால், ஜி.பி.எஸ். மூலம் அருகில் உள்ள பறக்கும் படை வாகனம் கண்டறியப்பட்டு, அவர்களை உடனடியாக சம்பந்தப்பட்ட இடத்துக்கு அனுப்பிவைப்போம். மீதமுள்ள பறக்கும் படை வாகனங்களிலும் விரைவில் ஜி.பி.எஸ். கருவி பொருத்தப்படும். தொடர்ந்து, வாக்குப்பதிவு இயந்திரங்களை கொண்டுசெல்லும் வாகனங்களிலும் ஜி.பி.எஸ். கருவி பொருத்தப்படும்’’ என்றனர்.