‘கோமாளி அரசியல் செய்யும் ராகுல்’ - சி.டி.ரவி

‘கோமாளி அரசியல் செய்யும் ராகுல்’ - சி.டி.ரவி
Updated on
1 min read

நீலகிரி மாவட்டம் உதகையில் பாஜக சார்பில் நேற்று தேர்தல் பிரச்சாரப் பொதுக்கூட்டம், ஊர்வலம் மற்றும் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம், மாவட்டத் தலைவர் மோகன்ராஜ் தலைமையில் நடைபெற்றது. இதில் பங்கேற்ற மேலிடப் பொறுப்பாளர் சி.டி.ரவி செய்தியாளர்களிடம் கூறியதாவது:

தமிழகம் முழுவதும் பாஜக சார்பில் நடைபெறும் வெற்றிக்கொடி யாத்திரைக்கு மக்களிடம் மிகுந்த வரவேற்பு உள்ளது. வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் அனைத்து தொகுதிகளிலும் பாஜக கூட்டணி வெற்றி பெறும். தொகுதிப் பங்கீடு தொடர்பாக அதிமுகவுடன் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. ஓரிரு நாட்களில் தொகுதிப் பங்கீடு இறுதி செய்யப்படும்.

பாஜகதான் தமிழ்க் கலாச்சாரத்தைப் பாதுகாத்து வருகிறது. ஜனநாயகத்தை அடிப்படையாகக் கொண்டு அதிமுக செயல்படுகிறது. ஆனால், திமுகவில் குடும்ப அரசியல் மட்டுமே செய்கின்றனர்.

காங்கிரஸ், திமுக கூட்டணி ஆட்சியில்தான் ஜல்லிக்கட்டுக்கு தடை விதிக்கப்பட்டது. தடையை நீக்கி மீண்டும் ஜல்லிக்கட்டு நடத்த பாஜகதான் நடவடிக்கை மேற்கொண்டது. பெட்ரோல் விலையைக் கட்டுப்படுத்த, சுயசார்பு பாரத திட்டத்தின் கீழ் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ராகுல் காந்தி வாக்காளர்களைக் கவர, கோமாளிபோல அரசியல் செய்து வருகிறார். இது மக்களிடையே எடுபடாது. இவ்வாறு அவர் கூறினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in