Published : 06 Mar 2021 03:14 AM
Last Updated : 06 Mar 2021 03:14 AM

முதியோர், மாற்றுத் திறனாளிகளுக்கு தபால் வாக்கு படிவங்கள் விநியோகம்

சென்னை மாவட்டத்தில் முதியோர் மற்றும் மாற்றுத் திறனாளிகள் தபால் ஓட்டு போடுவதற்கான படிவங்களை அவர்களிடம் வழங்கும் பணியை, மயிலாப்பூரில் மாவட்ட தேர்தல் அதிகாரி கோ.பிரகாஷ் நேற்று தொடங்கி வைத்தார்.

தேர்தல் ஆணைய அறிவுறுத்தல்படி 80 வயதுக்கு மேற்பட்ட முதியோர் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கு தபால் ஓட்டு வசதி வழங்கப்பட உள்ளது. அதற்கான படிவங்களை பயனாளிகளிடம் வழங்கும் நிகழ்ச்சி மயிலாப்பூரில் நேற்று நடைபெற்றது. அதில் மாவட்ட தேர்தல் அதிகாரி கோ.பிரகாஷ் பங்கேற்று, படிவம் வழங்கும் பணிகளை தொடங்கி வைத்தார். அந்தந்த பகுதிகளைச் சேர்ந்த வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள், பயனாளிகளுக்கு படிவங்களை வழங்கினர்.

அப்போது கோ.பிரகாஷ் செய்தியாளர்களிடம் கூறியதாவது: சென்னை மாவட்டத்தில் 19 லட்சத்து 95,581 ஆண், 20 லட்சத்து 60,698 பெண், 1,081 இதரர் என மொத்தம் 40 லட்சத்து 57,360 வாக்காளர்கள் உள்ளனர். மாவட்டத்தில் மொத்தம் 5,911 வாக்குச் சாவடிகள் உள்ளன. அவற்றில் 2,157 துணை வாக்குச்சாவடிகள் அடங்கும். மாவட்டத்தில் மொத்தம் 461 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை. கடந்த தேர்தலில் 335 வாக்குச் சாவடிகள் பதற்றமானவையாக இருந்தன.

மாவட்டத்தில் 80 வயதுக்கு மேற்பட்டோர் 1 லட்சத்து 8,644 பேர், மாற்றுத் திறனாளிகள் 7,460 பேர், கரோனா வைரஸ் பாதித்த 90 பேர் உள்ளனர். இவர்களுக்கு தபால் ஓட்டுகள் வழங்கப்பட உள்ளன. அதற்காக 1 லட்சத்து 19,400 எண்ணிக்கையிலான 12டி படிவங்கள், 3,754 வாக்குச்சாவடி நிலை அலுவலர்களுக்கு அனுப்பப்பட்டுள்ளன.

அவற்றை வழங்கும் பணி தற்போது தொடங்கப்பட்டுள்ளது.

இத்தேர்தலில் பயன்படுத்த தேவையான 9,847 வாக்குப் பதிவு இயந்திரங்கள், 7,392 கட்டுப்பாட்டு இயந்திரங்கள், 7,474 விவிபாட் இயந்திரங்கள் தயார் நிலையில் உள்ளன. தேர்தல் பணியில் 40 ஆயிரம் பேர் ஈடுபடுத்தப்பட உள்ளனர். அவர்களில் 30 ஆயிரம் பேர் வாக்குச் சாவடிகளில் பணியாற்ற உள்ளனர்.

பறக்கும் படையினர் மூலம் இதுவரை ரூ.5 லட்சத்து 8 ஆயிரம் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. தகுந்த ஆவணம் இன்றி கொண்டு செல்லப்பட்ட 960 கிலோ அரிசி, சேலை, சால்வை உள்ளிட்டவையும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

பொது இடங்கள் மற்றும் தனியார் இடங்களில் எழுதப்பட்டிருந்த சுவர் விளம்பரங்கள், பேனர்கள் என 39,502 விளம்பரங்கள் அழிக்கப்பட்டுள்ளன. மயிலாப்பூரில் அனுமதி இன்றி ஊர்வலம் சென்றதாக ஒரு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x