

மக்கள் நல கூட்டு இயக்கத்தின் குறைந்தபட்ச செயல்திட்ட அறிக்கை நாளை (நவ. 2) வெளியிடப்படும் என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்தார்.
தலித்துகள், சிறுபான்மையினர் மற்றும் கருத்துரிமைக்கு எதிரான வன்முறைகளைக் கண்டித்து, திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே மக்கள் நல கூட்டு இயக்கம் சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதில் பங்கேற்ற வைகோ பேசியபோது, “நாடளவில் கருத் துச் சுதந்திரத்துக்கு பெரிய ஆபத்து நேரிட்டுள்ளது. இது, நெருக்கடி நிலையைவிட ஆபத்தானது. தமிழ கத்திலும் அந்தச் சூழல் நிலவுகி றது. மக்கள் கலை இலக்கிய கழகத்தின் பாடகர் கோவன் கைது நடவடிக்கை மூலம் மதுவிலக்கு கோரிக்கை மீண்டும் வலுப்பெறத் தொடங்கியுள்ளது.
வரும் நவம்பர் 3-ம் தேதி விலை உயர்வைக் கண்டித்து தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் மக்கள் நல கூட்டு இயக்கம் சார்பில் போராட்டம் நடைபெறவுள்ளது. அதற்கு முன்னதாக, நவம்பர் 2-ம் தேதி மக்கள் நல கூட்டு இயக்கத் தின் குறைந்தபட்ச செயல் திட்ட அறிக்கை மதிமுக தலைமை யகத்தில் வெளியிடப்படும்.
தமிழகத்தில் 35 சதவீதமே கட்சி வாக்குகள். எஞ்சிய 65 சதவீத வாக்கு கள் நடுநிலையாளர்களுடையவை. எனவே, அதிமுக, திமுகவுக்கு மாற்றாக புதிய மாற்றத்தை ஏற்படுத்த நடுநிலையாளர்களுக்கு நல்ல வாய்ப்பு ஏற்பட்டுள்ளது” என்றார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த டி.கே.ரங்க ராஜன் எம்பி பேசும்போது, “மக்கள் நல கூட்டு இயக்கத்தின் சார்பில், மக்கள் ஒற்றுமைக்கான போராட் டம் தொடரும். மக்கள் நல கூட்டு இயக்கம் தமிழகத்தில் வரலாறு காணாத மாற்றத்தைக் கொண்டுவரும்” என்றார்.
இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் முத்தரசன், விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் திருமா வளவன் மக்கள்நல கூட்டு இயக்க கட்சிகளின் நிர்வாகிகள், மாவட்ட நிர்வாகிகள் உட்பட ஏராளமானோர் பங்கேற்றனர்.
என் மீதும் நடவடிக்கை எடுக்கப்படுமா?
ஆர்ப்பாட்டத்தில் வைகோ பேசும்போது, தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள கோவனின் பாடலில் ஓரிரு வரிகளைப் பாடிவிட்டு, தன் மீதும் மதுவிலக்கு கோரும் கோடிக்கணக்கான பெண்கள் மீதும் தேசிய பாதுகாப்புச் சட்டத் தின்கீழ் நடவடிக்கை எடுக்கப்படுமா என்று கேள்வி எழுப்பினார்.