Published : 06 Mar 2021 03:15 AM
Last Updated : 06 Mar 2021 03:15 AM

அதிமுக முதல் கட்டமாக வெளியிட்டுள்ள வேட்பாளர் பட்டியலில் இடம்பிடித்தார் சண்முகநாதன்: ஆதரவாளர்கள் பட்டாசு வெடித்து கொண்டாட்டம்

அதிமுக சார்பில் வெளியிடப்பட்டுள்ள 6 பேர் கொண்ட முதலாவது வேட்பாளர் பட்டியலில் தூத்துக்குடி தெற்கு மாவட்ட அதிமுக செயலாளரான வைகுண்டம் எம்எல்ஏ எஸ்.பி.சண்முகநாதன் இடம் பிடித்தார். இதையடுத்து அவரது ஆதரவாளர்கள் பட்டாசு வெடித்து, இனிப்பு வழங்கி கொண்டாடினர்.

தமிழக சட்டப்பேரவை தேர்தல் ஏப்ரல் 6-ம் தேதி நடைபெறவுள்ளது. இதனை முன்னிட்டு அதிமுக சார்பில் போட்டியிடும் 6 வேட்பாளர்கள் கொண்ட முதலாவது பட்டியலை முதல்வர் கே.பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் நேற்று கூட்டாக அறிவித்துள்ளனர். முதல்வர்,துணை முதல்வர் உள்ளிட்ட 6 பேர்மட்டுமே இடம் பெற்றுள்ள இப்பட்டியலில் எஸ்.பி.சண்முகநாதன் வைகுண்டம் தொகுதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.

இது அவரது ஆதரவாளர்களை மகிழ்ச்சியடையச் செய்துள்ளது. தூத்துக்குடி டூவிபுரத்தில் உள்ள அதிமுக அலுவலகம் முன்பு திரண்டஅவர்கள் பட்டாசு வெடித்தும், இனிப்பு வழங்கியும் கொண்டாடினர்.

நிகழ்ச்சிக்கு மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கித் தலைவர் இரா.சுதாகர் தலைமை வகித்தார். மாவட்ட இளைஞரணி செயலாளர் வீரபாகு, பகுதி செயலாளர்கள் பொன்ராஜ், ஜெய்கணேஷ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இதேபோல் வைகுண்டத்தில் ஒன்றிய செயலாளர் காசிராஜன் தலைமையில் அதிமுகவினர் பட்டாசு வெடித்தனர். இதில் அதிமுகவினர் மற்றும் கூட்டணி கட்சியைச் சேர்ந்த பாஜக மற்றும் பாமகவினரும் கலந்து கொண்டனர்.

இதுகுறித்து அதிமுகவினர் கூறும்போது, ‘‘வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ள 6 தொகுதிகளும் கூட்டணி கட்சிகள் கேட்காத அதிமுகவுக்கான உறுதியான தொகுதிகள் ஆகும்.

மேலும் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ள 6 பேரும் தமிழகத்தில் உள்ள 6 பிரதான சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள். தென்மாவட்டங்களில் நாடார் சமுதாய மக்கள்அதிகம் உள்ள நிலையில் அச்சமுதாயம் சார்பில் சண்முகநாதன் பட்டியலில் இடம் பெற்றுள்ளார் என்கின்ற னர்.

ஸ்ரீவை. தொகுதியில் மீண்டும் போட்டி

பெயர் - எஸ்.பி.சண்முகநாதன்

வயது: 66

படிப்பு: 10-ம் வகுப்பு

மதம்/ ஜாதி: இந்து/ நாடார்

ஊர்: பண்டாரவிளை

அரசியல் அனுபவம்: 1972-ம் ஆண்டு கட்சியில் உறுப்பினராக சேர்ந்தார். கிளைக்கழக அமைப்பாளர், செயலாளர், பெருங்குளம் ஊராட்சித் தலைவர், பண்டாரவிளை தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி தலைவர், வைகுண்டம் ஒன்றிய அதிமுக செயலாளராக பதவி வகித்துள்ளார். 5 முறை அதிமுக மாவட்டச் செயலாளராக பணியாற்றியுள்ளார். கடந்த 2019-ம் ஆண்டு முதல் தூத்துக்குடி தெற்கு மாவட்ட செயலாளராக இருந்து வருகிறார்.

தேர்தல் வெற்றி: 2001, 2011, 2016 தேர்தல்களில் வைகுண்டம் தொகுதியில் வெற்றி. 2001-ல் கைத்தறித்துறை அமைச்சர், 2011-ல் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர், 2013-ல்சுற்றுலாத் துறை அமைச்சர், 2016-ல் பால்வளத்துறை அமைச்சர் பதவி வகித்துள்ளார். குடும்பம்: மனைவி ஆஷா. வைகுண்டம் ஊராட்சி ஒன்றிய உறுப்பினராக பணியாற்றியவர். 5 மகள்கள், ஒரு மகன் உள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x