

கோவில்பட்டி கோட்டாட்சியர் அலுவலகத்தில் சட்டப்பேரவை தேர்தல் தொடர்பாக அனைத்துக் கட்சி பிரதிநிதிகள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. கோட்டாட்சியர் சங்கரநாராயணன் தலைமை வகித்து பேசியதாவது:
'சட்டப்பேரவை தேர்தல் தொடர்பாக இந்திய தேர்தல் ஆணையம்விதிமுறைகளை வெளியிட்டுள்ளது. அதன்படி பொதுக்கூட்டம்மற்றும் பிரச்சாரங்கள் நடத்தஅனுமதி பெற 48 மணி நேரத்துக்கு முன்பாக விண்ணப்பிக்க வேண்டும். வேட்பு மனுதாக்கலின்போது வேட்பாளருடன் இருவருக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படும். முன்வைப்புத் தொகையாக பொதுப்பிரிவினருக்கு ரூ.10 ஆயிரம், எஸ்சி பிரிவினருக்கு ரூ.5 ஆயிரம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதனை ரொக்கமாகவோ அல்லது வங்கி செலான் மூலமாகவோ செலுத்தலாம்.
வேட்பாளர்களின் வரவு, செலவு கணக்குகளை பராமரிக்க புதிதாக கணக்கு தொடங்கி, வங்கிக் கணக்கு எண்ணை உதவி தேர்தல் நடத்தும் அலுவலரிடம் சமர்ப்பிக்க வேண்டும். வாகன பிரச்சாரத்தின் போது, வாகனங்களுக்கு உரிய ஆவணங்களை வைத்திருக்க வேண்டும். தெருக்களில் சென்று பிரச்சாரத்தில் ஈடுபடும் போது வேட்பாளருடன் 4 பேருக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படும்.
இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை கண்டிப்பாக பிரச்சாரம் மேற்கொள்ளக் கூடாது. தேர்தல் தொடர்பான புகார்களை 1950 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம். கிராமப்புற வீடுகளில் சுவர் விளம்பரம் மேற்கொள்ளும் போது, சம்பந்தப்பட்ட வீட்டின் உரிமையாளரிடம் அனுமதி பெற்றிருக்க வேண்டும். நகர்புறங்களில் வீடு மற்றும் பொதுச் சுவர்களில் விளம்பரம் செய்ய அனுமதி கிடையாது என்றார்.
கூட்டத்தில், கோட்டாட்சியரின் நேர்முக உதவியாளர் முருகானந்தம், வட்டாட்சியர் அமுதா, திமுக ஒன்றிய செயலாளர் முருகேசன், மார்க்சிஸ்ட் நகரச் செயலாளர் ஜோதிபாசு, நாம் தமிழர் கட்சி தொகுதி செயலாளர் மாரியப்பன், காங்கிரஸ் மேற்கு ஒன்றிய செயலாளர் ரமேஷ் மூர்த்தி, தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி இளைஞரணி மாவட்டத் தலைவர் கனி,அதிமுக தகவல் தொழில்நுட்பபிரிவு குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.