

அடுத்த 10 ஆண்டுகளுக்கான தொலை நோக்கு திட்டங்கள் குறித்த அறிக்கை வெளியிடப்பட உள்ளதால், திருச்சி திமுக பொதுக் கூட்டம் நிச்சயம் வரலாற்றில் இடம் பெறும் என முதன்மைச் செயலாளர் கே.என்.நேரு தெரிவித்தார்.
சட்டப்பேரவைத் தேர்தலுக்கு திமுகவினரை தயார்படுத்தும் வகையில் அக்கட்சியின் 11-வது மாநில மாநாடு மார்ச் 14-ம் தேதி திருச்சி மாவட்டம் சிறுகனூரில் 700 ஏக்கர் பரப்பளவில் நடத்த திட்டமிடப்பட்டிருந்தது.
ஆனால் அதற்குள் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு, நடத்தை விதி முறைகள் அமலுக்கு வந்ததால் இந்த மாநாடு ஒத்திவைக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து இந்நிகழ்வு, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பங்கேற்கும் பிரம்மாண்ட பொதுக் கூட்டமாக மாற்றப் பட்டு, அதே இடத்தில் மார்ச் 7-ம் தேதி (நாளை) நடைபெறும் என அறிவிக்கப் பட்டது.
தமிழகத்தின் ‘விடியலுக்கான முழக்கம்’ என பெயரிடப்பட்டுள்ள இந்தப் பொதுக் கூட்டம், நாளை காலை 7 மணிக்குத் தொடங்கி இரவு 8 மணி வரை நடைபெற உள்ளது. இதில், மாநிலம் முழுவதும் இருந்து பல்லாயிரக்கணக்கான திமுகவினர் பங்கேற்பர் என்பதால், அதற்கான விரிவான ஏற்பாடுகளை திமுகவினர் மேற்கொண்டு வருகின்றனர். இப்பணி களை திமுக முதன்மைச் செயலாளர் கே.என்.நேரு நேற்று பார்வையிட்டார்.
பின்னர் இதுகுறித்து கே.என்.நேரு ‘இந்து தமிழ்’ நாளிதழிடம் கூறியது:
தமிழகத்தின் அடுத்த 10 ஆண்டு களுக்கான தொலைநோக்கு பார்வை அறிக்கையை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இக்கூட்டத்தில் வெளியிட உள்ளார்.
தமிழகத்தை மேம்படுத்தும் வகை யிலான திட்டங்களை மு.க.ஸ்டாலின் அறிவிக்க உள்ளதாலும், இத்தேர்தலில் திமுகவின் வெற்றியை உறுதிப்படுத்தும் வகையில் இருப்பதாலும் இந்த பொதுக் கூட்டம் நிச்சயம் தமிழக வரலாற்றில் இடம் பிடிக்கும். இக்கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் வெளியிட உள்ள அறிவிப்புகளை அடுத்த 2 வாரங்களுக் குள் கட்சியின் நிர்வாகிகள், தொண்டர்கள் மூலம் தமிழகத்தில் உள்ள 2 கோடி குடும்பங்களிடம் கொண்டு சேர்க்க உள்ளோம் என்றார்.