

கும்பகோணம் வட்டாட்சியர் அலுவலகத்தில் வாக்காளர்களை கவரும் வகையில், திருமண அழைப்பிதழ் போல அச்சிடப்பட்டு வைக்கப்பட்டுள்ள வித்தியாசமான விளம்பர பலகை பலரையும் கவர்ந்துள்ளது.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் ஏப்.6-ம் தேதி நடைபெறவுள்ளது. இதையொட்டி, அனைவரும் தவறாமல் வாக்களிக்க வேண்டியதன் அவசியம் குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக தேர்தல் ஆணையம் பல்வேறு முயற்சிகளை எடுத்துவருகிறது.
அந்த வகையில், தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில், வாக்காளர்களை கவரும் வகையில், ‘கண்ணியத்துடன் வாக்களிக்க அழைப்பிதழ்' என்று குறிப்பிட்டு, திருமண அழைப்பிதழ் போன்று விளம்பரப் பலகையில் அச்சிடப்பட்டு, வட்டாட்சியர் அலுவலக நுழைவு வாயிலில் வைக்கப்பட்டுள்ளது. ‘தேர்தல் ஆணையம் நடத்தும் வாக்களிக்கும் வைபோகம்' என்றும், ‘அன்பளிப்பு பெறுவதும், அளிப்பதும் வாக்களிக்கும் விழாவில் பெரும் குற்றமாகும்' என்றும் குறிப்பிட்டு வைக்கப்பட்டுள்ள இந்த விளம்பர பலகை வாக்காளர்கள் பலரையும் கவர்ந்துள்ளது.
இந்த வித்தியாச விழிப்புணர்வு முயற்சிக்காக அதிகாரிகளை அனைத்துத் தரப்பினரும் பாராட்டி வருகின்றனர்.