Last Updated : 05 Mar, 2021 07:16 PM

 

Published : 05 Mar 2021 07:16 PM
Last Updated : 05 Mar 2021 07:16 PM

சேலத்தில் சுடுகாட்டில் தனியாளாக உடல் அடக்கம் செய்யும் பெண்ணுக்கு வீடு கட்டி கொடுத்து உதவி

சேலம் ட்ரக்கர்ஸ் கிளப் சார்பில் சுடுகாட்டில் உடல் அடக்கும் செய்யும் சீதாவுக்கு வீடு கட்டி கொடுத்து, சாவி வழங்கப்பட்டது

சேலத்தில் உள்ள சுடுகாட்டில் தனியாளாக நின்று உடல் அடக்கம் செய்யும் பணியில் ஈடுபட்டு வரும் பெண்ணுக்கு சேலம் ட்ரக்கர்ஸ் கிளப் சார்பில் இலவமாக வீடு கட்டி கொடுத்து உதவியதை பொதுமக்கள் வெகுவாக பாராட்டியுள்ளனர்.

சேலம் டிவிஎஸ் மயானத்தில் கடந்த பல ஆண்டாக தனியாளாக நின்று ஆயிரக்கணக்கான பிரேதங்களை அடக்கம் செய்யும் பணியில் சீதா என்பவர் ஈடுபட்டு வருகிறார். இளம் பெண்ணான சீதா குடும்பத்தில் ஏற்பட்ட வறுமை மற்றும் பெற்றோர்கள் இறந்ததால், எதிர்கால வாழ்க்கை பெரும் கேள்வி குறியானது. பெற்றோரை இழந்து, வீடில்லாமல் தனித்து விடப்பட்ட சீதாவுக்கு, டிவிஎஸ் மயானம் அடைக்கலம் கொடுத்தது. இறந்த உடல்களை அடக்கம் செய்யும் பணியில் கிடைக்கும் சொற்ப கூலியை கொண்டு, சீதா உணவு தேவையை பூர்த்தி செய்து கொண்டார்.

உடல் அடக்கம் செய்வதை தனது தொழிலாக்கி கொண்ட சீதா, இதுவரை ஆயிரக்கணக்கான பிரேதங்களை இரவு பகல் என்று பாராமல் தனி ஒரு ஆளாய் நின்று குழி தோண்டி அடக்கம் செய்து, தேவையான சடங்குகளை செய்து மக்களின் அபிமானத்தை பெற்றுள்ளார்.

இறந்தவரின் குடும்பத்தை சேர்ந்த பெண்கள் கூட மயானத்துக்குள் அடி எடுத்து வைக்காத மரபை கடைபிடித்து வரும் சமூக சூழலில், சீதா சுடுகாட்டில் தனி ஒரு ஆளாக இருந்து, உடல் அடக்கம் செய்து ‘பாரதியின்’ புரட்சி பெண் வரிசையில் இடம் பிடித்துள்ளதாகவே சமூக ஆர்வலர்கள் கருதுகின்றனர்.

ஊரார் உடலை அடக்கம் செய்யும் பணியில் அக்கறையுடன் செயலாற்றி வரும் சீதாவுக்கு மழை, வெயிலுக்கு ஒதுங்கிட ஓட்டை கூரை வீடே இருந்தது. இந்நிலையில், மயான வளாகத்தில் ஓய்வுக்காக ஏற்கனவே மாநகராட்சி சார்பில் அமைத்துக் கொடுக்கப்பட்ட சிறிய அறை முற்றிலும் பழுதடைந்து இடிந்து விழும் தருவாயில் இருந்ததால், சமூக ஆர்வலர்கள் யாரேனும் புனரமைத்து கொடுக்க வேண்டும் என்று சீதா கருணையுடன் கேட்டு கொண்டிருந்தார்.

சீதாவின் கோரிக்கைக்கு செவி சாய்த்த சேலம் ட்ரக்கர்ஸ் கிளப் நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் சேர்ந்து ரூ.1.50 லட்சம் மதிப்பீட்டில் பழுதடைந்த கட்டிடத்தை சீரமைத்து இலவசமாக வீட்டை கட்டி கொடுத்துள்ளனர். இதற்கான சாவியை சேலம் ட்ரக்கர்ஸ் கிளப் நிர்வாகிகள் நேற்று சீதாவிடம் ஒப்படைத்ததை பொதுமக்கள் பாராட்டியுள்ளனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x