

தமிழகத்தில் மழை நீடிக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வடகிழக்கு பருவமழை கடந்த 28-ம் தேதி தொடங்கியது. வளி மண்டலத்தில் மேல்அடுக்கு சுழற்சி ஏற்பட்டுள்ளதால் சென்னை உட்பட தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது. நேற்று முன்தினம் இரவு பல இடங்களில் கனமழை பெய்தது. நேற்று காலை 8.30 மணி வரை நிலவரப்படி தமிழகத்தில் அதிக பட்சமாக ஸ்ரீவைகுண்டம் மற்றும் பாபநாசத்தில் 10 செ.மீ. மழை பெய்துள்ளது.
தூத்துக்குடியில் 9, குளச்சலில் 7, இரணியல், குளித்துறை, தக்கலை, பொன்னேரியில் தலா 6, சென்னை தாம்பரம், பாளையங்கோட்டை, பட்டுக்கோட்டை, அதிராம்பட்டினம், நாங்குநேரி, கன்னியாகுமரியில் 5 செ.மீ. மழை பதிவாகி இருந்தது.
இந்நிலையில், சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நேற்று இடியுடன் பலத்த மழை பெய்தது. தாம்பரம், கோடம்பாக்கம், நுங்கம் பாக்கம், அமைந்தகரை, கிண்டி, சைதாப்பேட்டை, பல்லாவரம், நங்கநல்லூர், திருவிக நகர், புரசைவாக்கம், மாதவரம், அடையாறு, திருவான்மியூர், கொட்டிவாக்கம், பாலவாக்கம், சேப்பாக்கம், திருவல்லிக்கேணி, அண்ணா சாலை உள்ளிட்ட பலவேறு இடங்களில் மழை பெய்தது.
சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியது. மழை காரணமாக போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
அரபிக்கடலில் நிலைகொண்டிருந்த மேல்அடுக்கு சுழற்சி மேற்கு நோக்கி நகர்ந்து வருகிறது. இதனால் தமிழகம், புதுச்சேரியில் அடுத்த 24 மணி நேரத்துக்கு மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளது. கடலோர பகுதிகள் மற்றும் தென் மாவட்டங்களில் மழை பெய்யும். சில பகுதிகளில் கனமழை இருக்கும். சென்னையை பொறுத்த வரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். இரவு நேரங்களில் சில இடங்களில் இடியுடன் கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.