தேர்தல் கண்காணிப்பு; உதகையில் மூன்று மாநில ஆட்சியர்கள், எஸ்பிக்கள் ஆலோசனை

மூன்று மாநில ஆட்சியர்கள், எஸ்பிக்கள் ஆலோசனை
மூன்று மாநில ஆட்சியர்கள், எஸ்பிக்கள் ஆலோசனை
Updated on
1 min read

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு உதகையில் தமிழக, கேரளா, கர்நாடகா ஆகிய 3 மாநில எல்லையில் உள்ள 5 மாவட்டங்களை சேர்ந்த மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் காவல் கண்காணிப்பாளர்கள் ஆலோசனை நடத்தினர்.

ஒவ்வொரு தேர்தலின் போதும் தமிழக, கேரளா, கர்நாடகா ஆகிய 3 மாநில எல்லையில் உள்ள மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் காவல்துறை கண்காணிப்பாளர்கள் ஆகியோரிடையே ஆலோசனை கூட்டம் நடைபெறுவது வழக்கம். கடந்த நாடாளுமன்ற தேர்தலின் போது கேரள மாநிலம் வயநாட்டில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

இந்நிலையில், ஏப்ரல் 6-ம் தேதி தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. இதனைமுன்னிட்டு, உதகையில் உள்ள தமிழக அரசு விருந்தினர் மாளிகையில் தேர்தலுக்கான சட்டம் - ஒழுங்கு பாதுகப்பு குறித்த ஆலோசனை கூட்டம் இன்று (மார்ச் 5) நடைபெற்றது.

இதில், நீலகிரி மாவட்ட ஆட்சியர் ஜெ.இன்னசன்ட் திவ்யா, கேரள மாநிலம் வயநாடு மாவட்ட ஆட்சியர் ஆதில்லா அப்துல்லா, மலப்புரம் மாவட்ட ஆட்சியர் கோபாலகிருஷ்ணன், கர்நாடகா மாநிலம் சாம்ராஜ் நகர் துணை ஆணையர் எம்.ஆர்.ரவி, நீலகிரி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஆர்.பாண்டியராஜன், மலப்புரம் காவல்துறை கண்காணிப்பாளர் சுஜித்தாஸ், வயநாடு காவல்துறை கண்காணிப்பாளர் அரவிந்த் சுகுமார், சாம்ராஜ் நகர் காவல்துறை கண்காணிப்பாளர் ஆனந்தகுமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில், நீலகிரி மாவட்டத்தில் எல்லையோர சோதனைச்சாவடிகளான, நாடுகாணி, தாளூர், கக்கநல்லா, பாட்டவயல், பர்லியார், குஞ்சப்பனை, நம்பியார் குன்னு, மதுவந்தாள், சோலாடி, கக்குண்டி, மணல் வயல், கோட்டூர், ஓவேலி, மானார் உள்ளிட்ட 18 சோதனைச்சாவடிகளில் ஆய்வு தீவிரப்படுத்த முடிவு செய்யப்பட்டது.

தேர்தல் பரிசுப்பொருட்கள் பரிமாற்றம், பணம், மதுபாட்டில் கடத்தலை தடுக்கும் நோக்கத்தில் பாதுகாப்பு அதிகரிப்பு குறித்து அலுவலர்கள் விவாதித்தனர். அதிக எண்ணிக்கையிலான பொருட்களை வாங்குவோர் விவரங்களை பகிர்தல், சந்தேகத்துக்கு இடமான வகையில் எல்லையில் கடந்து செல்லும் வாகனங்கள் தொடர்பான தகவல்களை உடனுக்குடன் பரிமாறுதல் பற்றியும் ஆலோசனை செய்யப்பட்டது.

சோதனைச்சாவடிகள் மட்டுமின்றி எல்லையை கடந்து செல்லும் அனைத்து வழிகளையும் கண்காணிப்பது பற்றியும் ஆலோசித்தனர்.

குறிப்பாக, கேரள மாநில வனப்பகுதியில் அதிக மாவோயிஸ்ட் நடமாட்டம் இருப்பதால் அதனை கண்காணிப்பது மற்றும் கரோனா பரவல் அதிகரித்து வருவதால் அதனை தடுக்க மாநில எல்லைகளில் மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in