

அதிமுகவுடனான தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை சுமுகமாக நடைபெற்று வருவதாகத் தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் தெரிவித்தார்.
தூத்துக்குடி விமான நிலையத்தில் இன்று செய்தியாளர்களுக்கு அவர் அளித்த பேட்டி:
''நாளை மறுநாள் (மார்ச் 7) நாகர்கோவிலில் நடைபெறும் பிரம்மாண்ட தேர்தல் பிரச்சாரப் பொதுக்கூட்டத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கலந்து கொள்கிறார். அதற்கான ஏற்பாடுகளைக் கவனிப்பதற்காக நாகர்கோவில் செல்கிறேன். தமிழகம் முழுவதும் பாஜக தேர்தல் பணிகளைத் தொடங்கியுள்ளது. அதிமுகவுடனான தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை சுமுகமாகச் சென்று கொண்டிருக்கிறது. நல்ல எண்ணிக்கையில் தொகுதிகளைக் கேட்டுள்ளோம். தமிழக சட்டப்பேரவையில் பாஜக உறுப்பினர்கள் நிச்சயம் இரட்டை இலக்க எண்ணிக்கையில் இருப்பார்கள்.
அரசியலை விட்டு விலகுவதாகக் கூறியுள்ள சசிகலா, திமுக ஆட்சிக்கு வரக்கூடாது எனத் தெரிவித்துள்ளதை வரவேற்கிறோம். திமுகவை ஆட்சிக்கு வரவிடக்கூடாது என்பதுதான் எங்கள் நோக்கம். அவர்கள் மீண்டும் ஆட்சிக்கு வரத் துடிக்கிறார்கள். அது நடக்கக்கூடாது. மத விரோத சக்திகளோடு இணைந்து இந்துக்களுக்கு எதிராகத் துரோகம் செய்து வரும் திமுக, இலங்கையில் தமிழர்கள் கொல்லப்பட்ட போதும் வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தது. எக்காரணத்தைக் கொண்டும் தமிழகத்தில் திமுக ஆட்சிக்கு வரக்கூடாது என்பது மக்களுடைய எண்ணமாக உள்ளது. எனவே நடைபெறவுள்ள சட்டப்பேரவை தேர்தலில் திமுகவுக்குத் தக்க பாடம் புகட்ட மக்கள் தயாராக உள்ளனர்.
ராகுல் காந்தி பள்ளி, கல்லூரிகளுக்கு சென்று மத்திய அரசைப் பற்றி அவதூறாகப் பேசியுள்ளார். இதன் மூலம் தேர்தல் விதிமுறைகளை அவர் மீறியுள்ளார். எனவே, அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளோம்.
தமிழகத்தில் மூன்றாவது அணி, நான்காவது அணிகளெல்லாமல் கடந்த காலங்களில் தோல்வியில்தான் முடிவடைந்துள்ளன. இந்த முறையும் அப்படித்தான் நடக்கும். அதிமுக அரசு கடந்த 10 ஆண்டுகளாக தமிழகத்தை வளர்ச்சிப் பாதையில் கொண்டு சென்றுள்ளது. தற்போது விவசாயிகள் கடனைத் தள்ளுபடி செய்துள்ளது. குடிமராமத்துத் திட்டத்தைச் சிறப்பாகச் செயல்படுத்தியுள்ளது. அதுபோல மத்திய அரசு விவசாயிகளுக்கு ரூ. 6 ஆயிரம் வழங்கியுள்ளது.
மத்திய அரசு இந்த பட்ஜெட்டில் தமிழகத்திற்கு மட்டும் ரூ.5 லட்சம் கோடி ஒதுக்கீடு செய்துள்ளது. மதுரை- கொல்லம் தேசிய நெடுஞ்சாலை, சென்னை- பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை, தூத்துக்குடி துறைமுகம் மேம்பாடு, ராமநாதபுரத்தில் கடல் பாசிக்காகத் தனியாக, சிறப்புப் பொருளாதார மண்டலம் எனப் பல திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
கடந்த ஐந்தாண்டுகளில் முத்ரா திட்டத்தில் கடனுதவி வழங்கியது, அனைவருக்கும் வீடுகள் கட்டிக் கொடுத்தது, மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தில் ரூ.5 லட்சம் வரை மருத்துவ சிகிச்சை, சுயசார்பு பாரதத் திட்டம் எனத் திட்டங்களை அடுக்கிக் கொண்டே செல்லலாம். ஒவ்வொரு வீட்டிலும் மத்திய அரசின் திட்டங்களைப் பெற்ற பயனாளிகள் இருக்கிறார்கள். இதுபோன்ற வளர்ச்சித் திட்டங்களை மக்களிடம் எடுத்துக் சொல்லி பிரச்சாரம் செய்வோம்''
இவ்வாறு எல்.முருகன் தெரிவித்தார்.