

தேர்தல் பணியில் ஈடுபடும் ஆசிரியர்களை பள்ளிக் கல்வித் துறை அலுவலர்கள் கட்டாயமாக கரோனா தடுப்பூசி போடச் சொல்வதை தவிர்க்க வேண்டும் என, தமிழக ஆரம்பப் பள்ளி ஆசிரியர் சங்கம் சார்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
இது தொடர்பாக, அச்சங்கத்தின் பொதுச்செயலாளர் ஜான் வெஸ்லி இன்று (மார்ச் 05) வெளியிட்டுள்ள அறிக்கை:
"ஏப்ரல் 6-ல் நடைபெறும் சட்டப்பேரவைத் தேர்தலில் ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியரல்லாத பிறப் பணி அலுவலர்கள் தேர்தல் பணிக்காக நியமிக்கப்படுவார்கள். அவ்வாறு தேர்தல் பணியில் ஆசிரியர்கள் அனைவரும் ஈடுபட வேண்டி உள்ளது.
பள்ளிக் கல்வி துறையின் கீழ் உள்ள அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்கள். அதில் தேர்தல் பணிக்காக ஆசிரியர்கள் அனைவரும் கரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும் எனவும், தடுப்பூசி போட்டவர்களின் பெயர் பட்டியலை தினமும் அலுவலகத்திற்கு அனுப்ப வேண்டுமெனவும் குறிப்பிடப்பட்டு உள்ளது.
ஆசிரியர்களில் பலருக்கு பலவித உடல் உபாதைகள் இருக்கலாம், குறிப்பாக நீரிழிவு நோய், ரத்த அழுத்தம் உள்ளவர்கள், இதய அறுவை சிகிச்சை மற்றும் ஒவ்வாமை போன்ற வியாதிகளுக்கு மருந்து உட்கொள்பவர்களை தடுப்பூசி போட வேண்டும் என்று கட்டாயப்படுத்தக் கூடாது. மேலும், விருப்பம் உள்ளவர்கள் தடுப்பூசி போட்டுக் கொள்ளலாம் என கல்வித் துறை அலுவலர்கள் சுற்றறிக்கை அனுப்ப வேண்டும்".
இவ்வாறு, அவர் தெரிவித்துள்ளார்.