ஜெயலலிதா நினைவிடத்தை எதிர்த்து டிராபிக் ராமசாமி வழக்கு: உயர் நீதிமன்றம் தள்ளுபடி

ஜெயலலிதா நினைவிடத்தை எதிர்த்து டிராபிக் ராமசாமி வழக்கு: உயர் நீதிமன்றம் தள்ளுபடி

Published on

கடலோர ஒழுங்குமுறை மேலாண்மை விதிகளை மீறி ஜெயலலிதா சமாதி அமைக்கப்பட்டதால் அதற்கு தடைவிதிக்க மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்துக்கும், அரசுக்கும் உத்தரவிடக்கோரி டிராபிக் ராமசாமி தொடர்ந்த வழக்கை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

சென்னை மெரினா கடற்கரையில் உள்ள மறைந்த முதல்வர் ஜெயலலிதா சமாதியில், அவரது நினைவிடம் கட்டப்பட்டு, கடந்த ஜனவரி மாதம் திறக்கப்பட்டுள்ளது. இந்த நினைவிடம், கடலோர ஒழுங்குமுறை மண்டல விதிகளுக்கு விரோதமாக கட்டப்பட்டுள்ளதால், அதன் மீது நடவடிக்கை எடுக்க கோரி சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கை தாக்கல் செய்துள்ளார்.

அவரது மனுவில், “கடலோர ஒழுங்குமுறை மண்டல விதிகளின்படி, கடற்கரையில் இருந்து 500 மீட்டர் தூரத்துக்கு எந்த கட்டுமானங்களும் எழுப்பக் கூடாது. நினைவிடம் எழுப்ப மத்திய மற்றும் மாநில மாசு கட்டுப்பாட்டு வாரியங்களின் ஒப்புதலை பெற்றிருக்க வாய்ப்பில்லை.

நினைவிடத்துக்கு எதிராக நடவடிக்கை எடுக்கக் கோரிய தனது மனுவை பரிசீலித்து தகுந்த உத்தரவை பிறப்பிக்கும்படி, மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியத்துக்கும், சென்னை மாவட்ட ஆட்சியருக்கும் உத்தரவிட வேண்டும்”. எனக் கோரிக்கை வைத்துள்ளார்.

இந்த மனு நீதிபதிகள் சுப்பையா மற்றும் சத்திகுமார் சுகுமார குருப் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது, அப்போது ஜெயல்லிதா நினைவிடம் கட்ட தடை கோரிய வழக்குகளை உயர் நீதிமன்ற இரு நீதிபதிகள் அமர்வு தள்ளுபடி செய்துள்ளதாக அரசுத்தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதை ஏற்ற நீதிபதிகள், இந்த வழக்கை விசாரணைக்கு ஏற்றுக் கொள்ள முடியாது எனக் கூறி, தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in