

சட்டப்பேரவை தேர்தலை ஒட்டி நேர்க்காணல் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடப்பதாலும், முதல்வர், அமைச்சர்கள் வருவதாலும் ராயப்பேட்டை கட்சி அலுவலகம் அமைந்துள்ள சாலையில் பொதுமக்களை அனுமதிக்காமல் மூடி வைத்திருப்பதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு விரைவில் விசாரணைக்கு வர உள்ளது.
வரும் சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி விருப்பமனுத் தாக்கல் மற்றும் வேட்பாளர் நேர்காணல் ஆகியவற்றிற்காக கட்சியினர் அதிகமாக வந்து செல்வதாலும், முதல்வர், துணை முதல்வர், அமைச்சர்கள் என விஐபிக்கள் வருவதாலும், கடந்த சில நாட்களாக சென்னை ராயப்பேட்டையில் அதிமுக தலைமை அலுவலகம் அமைந்துள்ள அவ்வை சண்முகம் சாலையின் இரு பக்கமும் மூடப்பட்டு பொதுமக்களை அனுமதிப்பதில்லை.
இது தொடர்பாக வழக்கறிஞர் ஏ.பி.சூரியபிரகாசம் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் முறையீடு செய்துள்ளார்.
நீதிபதிகள் சுப்பையா மற்றும் சத்திகுமார் சுகுமார் குரூப் ஆகியோர் அடங்கிய அமர்வில் அவர் முறையீடு செய்தார். அதில் “அதிமுக நிர்வாகிகள் தங்கள் வாகனங்களை நிறுத்துவதற்காக சாலை மூடப்பட்டுள்ளதால், பாதசாரிகளும், பொதுமக்களும், அலுவலகம் செல்வோரும் மிகுந்த சிரமத்துக்கு உள்ளாகின்றனர், இதுகுறித்து உரிய நடவடிக்கைகள் எடுக்க உத்தரவிடக்கோரி மனுத்தாக்கல் செய்ய உள்ளதாகவும், அதை விசாரணைக்கு ஏற்க வேண்டும்”. எனக் கோரிக்கை வைத்தார்.
அதை ஏற்று, மனுத்தாக்கல் நடைமுறைகளை முடிக்க அறிவுறுத்திய நீதிபதிகள் வழக்கை திங்கட்கிழமை விசாரிப்பதாகத் தெரிவித்துள்ளார்.