Published : 05 Mar 2021 11:45 AM
Last Updated : 05 Mar 2021 11:45 AM

தமிழக மக்களின் நலனுக்காக அதிமுக - பாஜக கூட்டணி தோற்கடிக்கப்பட வேண்டும்: சீதாராம் யெச்சூரி பேட்டி

பாஜகவின் மக்கள் விரோதக் கொள்கைகளை அதிமுக கண்மூடித்தனமாக ஆதரிக்கிறது, இந்திய, தமிழக மக்களின் நலனுக்காக அதிமுக - பாஜக கூட்டணி தோற்கடிக்கப்பட வேண்டும் என, கோவையில் மார்க்சிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்திற்காக கோவை வந்த யெச்சூரி, கோவை காந்திபுரம் மார்க்சிஸ்ட் கட்சியின் மாவட்டக்குழு அலுவலகத்தில் நேற்று (மார்ச் 04) செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது அவர் பேசுகையில், "மார்க்சிஸ்ட் கட்சி நாடு முழுவதும் மக்கள் விரோத பாஜகவின் கொள்கைகளை சமரசமின்றி எதிர்த்துப் போராடி வருகிறது. பாஜகவின் கொள்கைகள் இந்திய அரசியலைமைப்பு சட்டத்தின் அடிப்படையையே சிதைத்து வருகிறது.

பெட்ரோலியப் பொருட்களின் விலை நாளுக்கு நாள் உயர்கிறது. மக்கள் மீது சுமத்தப்படும் இந்த வரிகளால் மக்கள் பெரிதும் பாதிப்புக்குள்ளாகின்றனர்.

பிரதமர் மோடியின் பிரச்சாரத்திற்கு செலவு செய்வதற்காக இந்த வரிகள் உயர்த்தப்படுகிறதோ என்கிற கேள்வி எழுகிறது. லட்சக்கணக்கான கோடி ரூபாய் இந்த வரி மூலம் மக்கள் மீது சுமத்தப்படுகிறது.

மத்திய அரசின் பொருளாதார கொள்கைகள் இந்திய நாட்டின் சுயசார்பு மீது தாக்குதலை தொடுக்கிறது. நேர்மையற்ற முறையில் பொதுத்துறை நிறுவனங்களின் பங்குகளை விற்பதன் மூலம் பெரும் கார்ப்பரேட்டுகள் உள்ளே வரவழைக்கப்படுகிறார்கள். பொதுத்துறை நிறுவனங்கள் தேசியமயமாக்கப்பட்டதன் நோக்கத்தையே பாஜக அரசு சிதைக்கிறது. பெரிய கார்ப்பரேட்டுகளை மேலும் பெரும் கார்ப்பரேட்டுகளாக உருவாக்குவதற்காகவே இந்த கொள்கைகளை திட்டமிடுகிறார்கள்.

நாடு தற்போது மிகப்பெரிய பொருளாதார ஏற்றத்தாழ்வை நோக்கி செல்கிறது. கடந்த வருடம் கரோனா காரணமாக இந்தியாவில் 15 கோடி பேர் வேலை மற்றும் வாழ்வாதாரத்தை இழந்துள்ளனர்.

இந்த நிலையிலும் நம் நாட்டில் கோடீஸ்வரர்கள் மிகப்பெரிய வளர்ச்சியடைந்துள்ளனர். உலகில் உள்ள பெரும் பணக்காரர்களைவிட இந்தியாவில் உள்ள பணக்கார்களின் வளர்ச்சி இந்த கரோனா காலத்திலும் அபரிமிதமாக வளர்ந்துள்ளது. தேர்ந்தெடுக்கப்பட்ட சில நண்பர்களின் வளர்ச்சிக்காகவே மோடி அரசு திட்டமிடுகிறது. அவர்கள் யாரென்று உங்களுக்கே தெரியும். அரசின் இந்தக் கொள்கைகளால் இந்திய தொழில்கள் பெரிய நிறுவனங்களால் கபளீகரம் செய்யப்படுகிறது. சிறு, குறு தொழில்கள் பெரும் நெருக்கடியை சந்தித்து வருகிறது.

கோவை மாவட்டத்திற்கு தொடர்ந்து வந்து கொண்டிருக்கிறேன். நீண்ட காலமாக இங்கு பம்ப் தொழில் முன்னணியில் உள்ளதை அறிவேன். ஆனால், இன்று இந்த துறை மிகப்பெரிய நெருக்கடியை சந்தித்து வருகிறது.

கடந்த மூன்று மாதங்களாக விவசாயிகள் தலைநகர் டெல்லியின் சாலைகளை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தி வருகிறார்கள். எங்கள் மீது திணித்த விரோதமான சட்டத்தை திரும்பப்பெறுங்கள் என்று மட்டும்தான் விவசாயிகள் கேட்கிறார்கள். விவசாயிகளின் கோரிக்கை மிக எளிமையானது, நியாமான கோரிக்கைகளாகும். ஆனால், இதற்குக்கூட செவிசாய்க்க முடியாத அரசாக மோடி அரசு உள்ளது. விவசாயிகள் மாற்றத்தை எதிர்க்கவில்லை. விவசாயிகளோடு பேசுங்கள், நாடாளுமன்றத்தில் விவாதித்துத் தேவையான திருத்தங்களோடு இந்த சட்டங்களைக் கொண்டு வாருங்கள் என்றுதான் கேட்கிறார்கள். இது மிக நியாயமான கோரிக்கைளாகும்.

ஆனால், மத்திய அரசு பிடிவாதம் பிடிக்கிறது. இந்தப் போராட்ட களத்திலேயே சுமார் 300-க்கும் மேற்பட்ட விவசாயிகள் உயிரை தியாகம் செய்துள்ளனர். ஆனால், இந்த அரசு இவ்விவகாரத்தில் எவ்வித அக்கறையும் செலுத்தவில்லை. நாட்டில் வேலைவாய்ப்பின்மை அதிகரித்துள்ளது. இளைஞர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகியுள்ளது.

ஆனால், இது குறித்து எந்தக் கவலையும் படாத பாஜக அரசு, வகுப்புவாத அணிதிரட்டலில் கவனம் செலுத்துகிறார்கள். இது இந்தியாவின் ஒருமைப்பாட்டை சீர்குலைக்கும் நடவடிக்கைகளாகும். இதேபோன்று, மத்திய, மாநில அரசுகளின் உறவுகளை சீர்குலைத்து சர்வாதிகாரத்தனமாக மாநில உரிமைகளில் தலையிடுகிறது.

கல்வியில் திணிப்பு, மொழி திணிப்பு ஆகியவற்றால் இந்திய அரசியலமைப்பின் அடிப்படையைத் தகர்க்க முயற்சிக்கிறார்கள். தலித்துகள், சிறுபான்மையினர், பழங்குடியினர் மீது திட்டமிட்டு தாக்குதல் நடத்தப்படுகிறது. குறி வைக்கப்படுகிறார்கள். இது நாட்டின் தற்போதைய முக்கிய பிரச்சினையாகும். தேர்தலில் இவ்விவகாரம் எதிரொலிக்கும்.

மத்திய அரசின் எல்லா கொள்கைகளையும் மாநிலத்தில் உள்ள அதிமுக அரசு கண்மூடித்தனமாக ஆதரிக்கிறது. இதனால்தான் மார்க்சிஸ்ட் கட்சி இந்தத் தேர்தலில் அதிமுக - பாஜக கூட்டணியை நிராகரிப்போம் என்கிற முழக்கத்தை முன்வைத்துள்ளோம்.

மதவாத பாஜகவை வீழ்த்த, மாநில உரிமைகளைப் பறிகொடுக்கும் அதிமுக அணிகளை வீழ்த்த திமுக அனைத்து மதச்சார்பற்ற சக்திகளை ஒருங்கிணைக்க வேண்டிய பொறுப்பு உள்ளது. இதுபோன்ற செயல்களால்தான் அதிமுக - பாஜக அணிகளை வீழ்த்த முடியும். இந்திய மக்களின் நலனுக்காகவும், தமிழக மக்களின் நலனுக்காகவும் அதிமுக - பாஜக கூட்டணி தோற்கடிக்கப்பட வேண்டும்.

மார்ச் 8 முதல் ஏப்ரல் 8 ஆம் தேதிவரை நாடாளுமன்ற கூட்டத்தொடர் என அறிவித்துள்ளார்கள். தேர்தல் நடைபெறும் இந்த ஐந்து மாநிலங்களிலும் பாஜகவுக்கு எதிரான அதிக எம்.பி-க்கள் உள்ள மாநிலங்களாகும். இந்த நேரத்தில் நாடாளுமன்ற கூட்டத்தொடரை நடத்தினால் எப்படி சரியானதாக இருக்கும். இது குறித்து, இடதுசாரி நாடாளுமன்ற உறுப்பினர்கள் நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்புவார்கள். முக்கியமான பட்ஜெட் விவாதங்களை மட்டும் தற்போது நடத்திவிட்டு நாடாளுமன்ற கூட்டத்தை ஒத்திவைக்க சொல்லி எங்கள் எம்.பி-க்கள் வலியுறுத்துவார்கள்" என்றார்.

முன்னதாக, சசிகலா அரசியலில் இருந்து வெளியேறுவது தொடர்பான கேள்விக்கு, "பாஜக இதனை கண்டிப்பாக வரவேற்கும். பாஜகவின் பங்கு இதில் என்ன என்பதை ஊடகங்கள்தான் கண்டுபிடிக்க வேண்டும்" என்றார்.

மேலும், "கேரளாவில் ஆளும் கம்யூனிஸ்ட் கட்சி வெற்றி பெறும் என்றும் தமிழகத்தில் ஆளும் கட்சி தோல்வி அடையும் என்பது அவர்களின் செயல்பாடுகளை வைத்தே கூறுகிறேன். அரசுக்கு எதிராக பேசுபவர்கள் கைது செய்யப்பட்டு பலர் சிறையில் உள்ளனர். என்ஐஏ இதுவரை எந்த குற்றப்பத்திரிகையும் அவர்கள் மீது தாக்கல் செய்யவில்லை. துன்புறுத்தும் நோக்கத்திலேயே இந்த ஊபா (UAPA) சட்டம் பாய்ந்துள்ளது. 83 வயதான ஸ்டேன்சுவாமியைக்கூட இவர்கள் சிறையில் வைத்துள்ளனர். எந்த போராட்டம் நடந்தாலும் இடதுசாரிகள்தான் செய்வதாக பிரதமர் மோடி கூறுகிறார். மக்கள் பிரச்சினைக்காக போராடுவதுதான் இடதுசாரிகளின் நோக்கம்" என்றார்.

இந்தப் பேட்டியின் போது மார்க்சிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன், மாநில செயற்குழு உறுப்பினர் என்.குணசேகரன், கோவை நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன், மாவட்ட செயலாளர் வி.இராமமூர்த்தி, மாநிலக்குழு உறுபபினர் சி.பத்மநாபன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x