

உதயநிதியின் அரசியல் பயணத்தை அவரது பணியும், தமிழக மக்களின் எண்ணங்களுமே தீர்மானிக்கும் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக ஆங்கில நாளிதழுக்கு அவர் அளித்த பேட்டியில், "திமுக எப்போதுமே கடின உழைப்பையும் கட்சிக்குத் தொண்டன் காட்டும் நேர்மையையும் மதிக்கும். நான் இன்றைக்கு கட்சியில் இருக்கும் நிலையை எட்ட 50 ஆண்டு காலம் கடினமாக உழைத்திருக்கிறேன். மற்ற அனைவரைப் போல உதயநிதியும் களத்தில் தீவிரமாகப் பணியாற்றிட வேண்டும்.
அவரது அரசியல் பயண முன்னேற்றம் அவருடைய கடின உழைப்பாலும், தமிழக மக்களின் மனங்களில் அவர் என்னவாக இடம்பெறுகிறார் என்பதைப் பொறுத்தும் அமையும்" எனக் கூறியுள்ளார்.
வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் உதயநிதி ஸ்டாலின் சேப்பாக்கம், திருவலிக்கேணி தொகுதியில் போட்டியிடலாம் எனக் கூறப்படும் நிலையில் ஸ்டாலின் இவ்வாறு தெரிவித்திருக்கிறார்.
வாரிசு அரசியல் புகாரும்; தலைமையின் தயக்கமும்:
முன்னதாக, விழுப்புரத்தில் பேசிய உள்துறை அமைச்சர் அமித் ஷா, 'ராகுலைப் பிரதமராக்க வேண்டும் என்பதில் சோனியாவுக்கு அக்கறை; உதயநிதியை முதல்வராக்க வேண்டும் என்பதில் ஸ்டாலினுக்கு அக்கறை' என்று வாரிசு அரசியல் பற்றி பேசியிருந்தார்.
இந்தக் குற்றச்சாட்டுகளால், இந்தத் தேர்தலில் உதயநிதிக்கு சீட் வழங்க தயக்கம் காட்டப்படுவதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், உதயநிதிக்கு சீட் வழங்குவது குறித்த பதிவு செய்துள்ள இந்தக் கருத்து முக்கியத்துவம் பெறுகிறது.
ஏற்கெனவே உதயநிதிக்கு கட்சியில் இளைஞரணிச் செயலாளர் பதவி அளிக்கப்பட்டதற்கும் அதன்பின்னர் அவருக்கு கட்சிக்குள் அளிக்கப்படும் முக்கியத்துவமும் நீண்ட கால பொறுப்பாளர்களை அதிருப்தியில் ஆழ்த்தியிருப்பதாக கூறப்படுகிறது. இந்நிலையில், அரசியல் பிரவேசம் கண்ட குறுகிய காலத்தில் தேர்தலில் சீட் வழங்கப்பட்டால் மேலும் சலசலப்புகள் உருவாக வாய்ப்புள்ளது.
கட்சியினருக்கு வழிகாட்டும் துரைமுருகன் பேச்சு:
ஆனால், இதுபோன்ற சலசலப்புகளை ஆரம்ப நிலையிலேயே சமன்படுத்தும் வகையில் அமைந்துள்ளது அண்மையில் திமுக பொதுச் செயலாளர் துரைமுருகனின் பேச்சு.
பொதுக்கூட்டம் ஒன்றில் பேசிய துரைமுருகன் "கருணாநிதி அமைச்சரவையிலும் துரைமுருகன் இருந்தான். ஸ்டாலின் அமைச்சரவையிலும் இருப்பான், நாளை உதயநிதி அமைச்சரவையிலும் இருப்பான். எனக்கு ஒன்றும் இல்லை. என்னை வளர்த்தவர் கருணாநிதி. எங்கோ இருந்த என்னைக் கொண்டு வந்து 2 கோடி தொண்டர்கள் உள்ள இக்கட்சியின் பொதுச் செயலாளராக அமர வைத்திருக்கிறாரே? இது ஒன்று போதாதா?" எனக் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.