

புதுவை முதல்வர் என்.ரங்கசாமியின் தாயார் பாஞ்சாலி அம்மாள் (94) மறைவுக்கு முதல்வர் ஜெயலலிதா மற்றும் அரசியல் கட்சித் தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பாக நேற்று வெளியிட்ட அறிக்கையில் அவர்கள் கூறியிருப்பதாவது:
முதல்வர் ஜெயலலிதா:
தாயாரை இழந்து வாடும் புதுவை முதல்வர் ரங்கசாமிக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். ஈடு செய்ய முடியாத இந்த பேரிழப்பை தாங்கிக் கொள்ளக் கூடிய மன வலிமையை அவருக்கு அளிக்க இறைவனை வேண்டுகிறேன்.
விஜயகாந்த் (தேமுதிக தலைவர்):
புதுவை முதல்வர் என்.ரங்கசாமியின் தாயார் பாஞ்சாலி அம்மாள் மறைவு செய்தியறிந்து வேதனை அடைந்தேன். தாயாரை இழந்து வாடும் ரங்கசாமிக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
ராமதாஸ் (பாமக நிறுவனர்):
என்.ரங்கசாமியின் தாயார் பாஞ்சாலி அம்மாள் மறைவு செய்தி கேட்டு அதிர்ச்சியும், வேதனையும் அடைந்தேன். ரங்கசாமியின் முன்னேற்றத்தையும், அவரது மக்கள் பணிகளையும் கண்டு மகிழ்ந்தவர் பாஞ்சாலி அம்மாள்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன், அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார், தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் தி.வேல்முருகன் உள்ளிட்டோர் ரங்கசாமியின் தாயார் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளனர்.