

சட்டப்பேரவைத் தேர்தலில் அமமுக சார்பில் போட்டியிட விருப்பமனு அளித்தவர்களிடம் வரும் மார்ச் 8, 9 தேதிகளில் நேர்காணல் நடைபெறும் என அக்கட்சித் தலைமை அறிவித்துள்ளது.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் அமமுக வாக்குகளைப் பிரிக்கும் சக்தியாகப் பார்க்கப்படுகிறது. அதுவும் குறிப்பாக அதிமுகவின் வாக்குகளைப் பிரிக்கும் சக்தியாகக் கருதப்படுகிறது.
இந்நிலையில், அமமுகவுக்கு பலமாக இருப்பார் என எதிர்பார்க்கப்பட்ட சசிகலா, அரசியலில் இருந்து ஒதுங்குவதாக அறிவித்துள்ளார். அவரது அறிவிப்பால் அதிர்ச்சியடைந்துள்ளதாக அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்திருந்தார்.
இருப்பினும், வழக்கம்போல் விருப்பமனுக்களைப் பெறுவது தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்நிலையில், சட்டப்பேரவைத் தேர்தலில் அமமுக சார்பில் போட்டியிட விரும்புவோருக்கான நேர்காணல் மார்ச் 8, 9 தேதிகளில் நடைபெறும் என அக்கட்சித் தலைமை அறிவித்துள்ளது.
இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், "தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி சட்டமன்றப் பேரவைகளுக்கான பொதுத்தேர்தல்கள் நடைபெற உள்ளதை முன்னிட்டு, தலைமைக் கழகத்தில் கடந்த 3.3.2021 முதல் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் சார்பில் வேட்பாளர்களாகப் போட்டியிட வாய்ப்பு கோரும் கழக உடன்பிறப்புகளுக்கு விருப்ப மனுக்கள் வழங்கப்பட்டு வருகின்றன.
6.4.2021 அன்று சட்டமன்றத் தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், கழகத்தின் சார்பில் போட்டியிட வாய்ப்பு கோரும் கழக உடன்பிறப்புகளுக்கு 7.3.2021 - ஞாயிற்றுக்கிழமை வரை மட்டுமே விண்ணப்பப் படிவங்கள் வழங்கப்படவிருக்கின்றன. விண்ணப்பப் படிவங்களை பூர்த்தி செய்து அன்றைய தினம் மாலை 5 மணிக்குள் தலைமைக் கழகத்தில் திரும்ப ஒப்படைக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம். இதனைத்தொடர்ந்து விருப்ப மனு செலுத்தியவர்களுக்கான நேர்காணல் வரும் 8.3.2021 மற்றும் 9.3.2021 ஆகிய இரு நாட்களிலும் சென்னை ராயப்பேட்டையில் உள்ள தலைமைக் கழகத்தில் நடைபெறும்" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறைந்த தொகுதிகளில் போட்டியா?
234 தொகுதியிலும் அமமுக போட்டியிடும் என்றே டிடிவி தினகரன் சொல்லிவந்தாலும், அதைவிட, குறைவான தொகுதிகளில் கவனம் செலுத்தி, வெற்றி பெற வியூகம் வகுப்பதாக அமமுகவினர் தரப்பில் கூறப்படுகிறது.
இது குறித்து மதுரையைச் சேர்ந்த அமமுக நிர்வாகிகள் சிலர் இந்து தமிழ் திசையிடம் கூறியது: சசிகலா வருகைக்கு பின், அதிமுக- அமமுக இணை வாய்ப்பு இருக்கும் எனக் கருதினோம். பிரிந்துள்ள தொண்டர்களை ஒருங்கிணைத்து, ஜெயலலிதாவின் ஆட்சியை அமைக்கலாம் என, சசிகலாவும் இருமுறை அழைப்புவிடுத்தார். இருப்பினும், முதல்வர், துணை முதல்வர் தரப்பில் இருந்து எதுவும் நடக்கவில்லை. அதிமுகவினர், தொண்டர்களை ஒற்றுமைப்படுத்தும் அவரது முயற்சி தோல்வி அடைவதால் வேறு வழியின்றி அரசியலில் இருந்து ஒதுங்கியுள்ளார். இது தற்காலிகமானது தானே தவிர, எங்களை பொறுத்தவரை நிரந்தரமல்ல.
தேர்தல் பணியில் முழுக்கவனம் செலுத்துதல், செலவினம், வாக்குப்பதிவுக்கு குறைந்த நாட்களே இருப்பதால் பிரச்சார சுற்றுப்பயணம்
திட்டமிடுதல் போன்றவற்றைக் கருத்தில் கொண்டு சுமார் 120க்கும் மேற்பட்ட தொகுதிகளில் போட்டியிட திட்டமிட்டுள்ளோம். குறிப்பாக தென்மாவட்டம், டெல்டா மாவட்டங்களில் அதிகளவில் போட்டியிடுவோம். பிற மாவட்டங்களில் வெற்றி வாய்ப்புள்ள தொகுதியில் போட்டியிடுவோம்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.