Published : 05 Mar 2021 03:15 AM
Last Updated : 05 Mar 2021 03:15 AM

‘தினமலர்’ முன்னாள் ஆசிரியர் இரா.கிருஷ்ணமூர்த்தி காலமானார்; ஆளுநர், முதல்வர், துணை முதல்வர், தலைவர்கள் இரங்கல்: ஸ்டாலின் உள்ளிட்டோர் நேரில் அஞ்சலி

‘தினமலர்’ நாளிதழின் முன்னாள்ஆசிரியரும், நாணயவியல் அறிஞருமான இரா.கிருஷ்ணமூர்த்தி காலமானார். அவருக்கு வயது 88.

‘தினமலர்’ நிறுவனர் கி.ராமசுப்பையரின் மகனான இரா.கிருஷ்ணமூர்த்தி கடந்த 1933-ம்ஆண்டு கன்னியாகுமரி மாவட்டத்தில் பிறந்தார். 1956-ல் தினமலர் நாளிதழில் தனது பயணத்தை தொடங்கிய அவர், கடந்த 1977-ல் ‘தினமலர்’ ஆசிரியர் ஆனார்.

நாளிதழில் தமிழ் எழுத்து சீர்திருத்தத்தை முதலில் நடைமுறைப்படுத்திய அவர், கணினியில் தமிழ் பயன்பாட்டுக்கு ஏற்ற வகையில் எழுத்துருக்களை உருவாக்கினார். தமிழ் வட்டெழுத்துகள் குறித்த ஆவணங்களை சேகரித்து தமிழில், ‘சேர நாட்டில் தமிழ் வட்டெழுத்து’, ‘பிற்கால தமிழ் வட்டெழுத்து’ என்பது உள்ளிட்ட 3 நூல்களை எழுதியுள்ளார்.

2015-ல் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி இவருக்கு ‘தொல்காப்பியர்’ விருதை வழங்கினார்.

‘தினமலர்’ நாளிதழின் ஆசிரியராக 40 ஆண்டுகாலம் பணியாற்றிய இரா.கிருஷ்ணமூர்த்தி வயது மூப்புகாரணமாக நேற்று காலை காலமானார். சென்னை பெசன்ட் நகர் காவேரி தெருவில் உள்ள அவரது இல்லத்தில் உடல் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. அவரது உடலுக்கு அரசியல் தலைவர்கள், ஊடகத் துறையினர் உட்பட ஏராளமானோர் அஞ்சலி செலுத்தினர்.

தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், ‘‘இரா.கிருஷ்ணமூர்த்தி மறைவு தினமலர் வாசகர்களுக்கும், தமிழக மக்களுக்கும் பேரிழப்பு’’ என்று தெரிவித்துள்ளார்.

முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்ட இரங்கல் செய்தியில், ‘‘ இதழியலாளர், தமிழ் அறிஞர், நாணயவியல் ஆராய்ச்சியில் ஆர்வம் கொண்டு பல புத்தகங்களை எழுதியவர் ஆர்.கிருஷ்ணமூர்த்தி. அவரதுமறைவு இந்திய பத்திரிகை உலகத்துக்கும், தமிழ் ஆராய்ச்சி முயற்சிகளுக்கும் ஈடுசெய்ய முடியாதஇழப்பு’’ என்று தெரிவித்துள்ளனர்.

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட இரங்கல் செய்தியில், ‘‘ஆர்.கிருஷ்ணமூர்த்தியின் மறைவு தமிழ் பத்திரிகை உலகுக்கு பேரிழப்பு. பத்திரிகையாளராக மட்டுமின்றி, நாணயவியல் ஆராய்ச்சியில் மிகுந்த ஈடுபாடு கொண்ட கிருஷ்ணமூர்த்தியின் ஆய்வுகளும், ஆதாரங்களும், தமிழுக்கு இந்திய அரசின்செம்மொழித் தகுதி கிடைக்க துணைநின்றன’’ என்று தெரிவித்துள்ளார்.

கிருஷ்ணமூர்த்தியின் உடலுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், தமிழக பாஜக தலைவர் எல்.முருகன், தமாகா தலைவர் ஜி.கே.வாசன்உள்ளிட்டோர் நேற்று அஞ்சலி செலுத்தினர். பெசன்ட் நகர் மயானத்தில் இன்று காலை 9 மணிக்கு இறுதிச்சடங்கு நடைபெறுகிறது.

தி.க.தலைவர் கி.வீரமணி, காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி, மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, தேமுதிக தலைவர் விஜயகாந்த், பாமக நிறுவனர் ராமதாஸ், முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன், சமக தலைவர் சரத்குமார், அகில இந்திய மூவேந்தர் முன்னணிக் கழக தலைவர் ந.சேதுராமன், இந்திய மக்கள் கல்வி முன்னேற்றக் கழக தலைவர் தேவநாதன் உள்ளிட்டோரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

நாணயவியல் அறிஞர்

சங்ககால பாண்டிய மன்னரான பெருவழுதி வெளியிட்ட நாணயங்கள், சேர மன்னர்கள் வெளியிட்ட வெள்ளி நாணயங்கள், ரோமானிய மன்னர்கள் வெளியிட்ட நாணயங்கள் ஆகியவற்றை கண்டுபிடித்துள்ளார் இரா.கிருஷ்ணமூர்த்தி. இதுதொடர்பாக பல்வேறு நூல்களை தமிழ், ஆங்கிலத்தில் எழுதியுள்ளார். இந்திய நாணயவியல் கழகத் தலைவர், தென்னிந்திய நாணயவியல் கழகத்தின் தலைவர் உள்ளிட்ட பல்வேறு பொறுப்புகளில் இருந்துள்ளார். இதழியல், தமிழ் எழுத்துசீர்திருத்தம், கல்வெட்டியல், நாணயவியல் தொடர்பான இவரது பங்களிப்பை போற்றும் வகையில், மதுரை காமராசர் பல்கலைக்கழகம் இவருக்கு கடந்த 2004-ம் ஆண்டு கவுரவ டாக்டர் பட்டம் வழங்கியது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x